Author: Satya
•8:30 AM
இந்நாட்களில்  அலுவலகப்பணி முடித்து சற்றே தாமதமாக வீட்டிற்கு [ஹோட்டல் தான் என் வீடு client   place இல்... ] வருகிறேன்... மீண்டும் ஒரு ப்ராஜெக்ட் அட்லாண்டாவில்...அனால் இம்முறை வேற client ... பட் அதே ஆணி.... [ என் அட்லாண்டாவில் ஆணி பதிவை படித்தவர்களுக்கு என் வலி தெரியும்....] கூட பணிபுரியும் சகபணியாளர் (70 வயது வாலிபர்...) அநியாயத்துக்கு வேலை வாங்குவார்... மனுஷன் ஹோட்டல் சாப்பிடும் போதும் Tissue பேப்பர் லே கூட requirements எழுதுவார்...[என்ன கொடுமை சார் இது.....]

வழக்கத்துக்கு மாறா, இன்று அலுவலகத்தில், ஒரு ஆணியும் புடுங்காததால் சீக்கிரம் வீட்டை சென்றடைந்தேன்...கொஞ்சம் களைப்பு என் கண்ணை கட்டிய நிலையில், கட்டிலின் அருகிலிருந்த Boss head set  என் கண்ணில் பட்டது...அமெரிக்காவில் நான் மிகவும் ரசித்து வாங்கிய பொருட்களில் இதுவும் ஒன்று...Noice Cancellation  உடன் சின்ன சின்ன ஒலிகளையும் துள்ளியமாக செவிகளுக்கு கொண்டு செல்லும் என் backup காதலி!!! காதில் பொருத்திய அடுத்த கணம், என்னை மிகவும் நெருடிய பாடலை கேட்க தோன்றிய என் மனம், என் விரல்களுக்கு உத்தரவிட,IPhone ல் பாட்டை போட்டது விரல்....

15 நொடிகள் வீணை என்னை மூழ்கடித்தது ...இந்த ஓசைக்கு நிகர் ஏதும் உள்ளதோ என்றெண்ணி முடிக்கும் முன், சுதா தன்யாசி ராகத்தில் P. சுசீலாவின் குரல் வீணை ஓசையை வெல்லும் வகையில்...

"மாலை பொழுதின் மயக்கத்திலே நான்.... கனவு கண்டேன் தோழி.....
     மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன்  தோழி? ....."

என்று பாடல் ஒலிக்க, சுசீலா அவர்களின் குரலும், பாடிய விதமும் இனம் புரியாத ஒருவித அழுத்தம்... என் மனதில்....

பாடலின் வரிகள்....chance இல்ல.... சத்தியமா, கண்ணதாசன் என்ற உன்னத கலைஞனுக்கு நிகர் எவரும் இலர் என்பதனை யாரும் மறுக்கவே முடியாது...ஒவ்வொரு வரியிலும் வார்த்தைகளை அல்ல வைரங்களை தொடுத்திருக்கிறார் கண்ணதாசன்... ஒரு மனுஷன் எப்படி இவ்வளவு யோசிக்க முடியும்?

"மனம் முடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி...
     மங்கை என் கையில் குங்குமம் தந்தார்...மாலை இட்டார் தோழி...
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி...
     அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்துவிட்டார் தோழி...மறந்துவிட்டார் தோழி..."

" கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி....
    கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
 இளமை எல்லாம் வெறும் கனவு மையம் இதில் மறைந்தது சில காலம்...
    தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்.....
   மயங்குது எதிர்காலம்....." 

 ஒரு இளம் விதவையின் குமுறலை இதை விட எடுத்துக் காண்பிக்க முடியுமா? இந்த வைரவரிகளை வித்திட்ட கண்ணதாசன் அவர்களின் மறைவுக்கு மீண்டும் வருத்தப்பட்டேன் அக்கணம்..

பாடல் முடிந்து 15 வினாடிகளாவது இருக்கும்.... இன்னமும் மூடியிருந்த என் கண்களை  திறக்கத்   தோன்றவில்லை... என்னை முழுவதும் மறந்து பரவச நிலையில் இருந்த போது [என்ன நித்யானந்தா மாதிரி பேசறேன்? ] "இஸ்க்கு ...இஸ்க்கு..." என்று ஒரு சத்தம் கேட்டது...வேறொன்றும் இல்லை அது என் phone ...நண்பர் பிரதீப் 'Viber" ல் அழைக்க, எடுத்து 'வணக்கம் தலைவரே ! எப்படி இருக்கீங்க? என்ன பண்றீங்க?" என்று ஆரம்பித்தேன்..

முன்னதாக பிரதீப் பற்றி கண்டிப்பாக நான் சொல்லியே ஆக வேண்டும்... பிரதீப் தான் என்னை முதன்முதலில் பதிவுலகிற்கு அறிமுகம் செய்து எழுதுங்கள் என்று தூண்டியவர்...[அவனா நீ?....] நல்ல படைப்பாளி..பல சிறுகதைகள், சுவாரசியமான சம்பவங்கள் என்று எழுதி தள்ளுவார்...தவிர, எங்களுக்குள் அடிக்கடி கருத்துப் பரிமானகள் நிறையவே இருக்கும்... போனவாரம் தான் அவருக்கு "viber " என்று ஒரு இலவச app  இருக்கு சொன்னேன்...பாருங்க அதுக்குள்ளே இலவசமா கொடுத்தவன அழ வைக்கிற அளவுக்கு உபயோகப்படுத்துரத.... எங்க உரையாடலின் துவக்கம் கண்ணதாசனின் பாடலா போச்சு..."நல்ல நேரத்துல அழைச்சீங்க பிரதீப்..இப்போ தான் ஒரு அட்டகாசமான பாட்ட ரசித்துக் கொண்டிருந்தேன்.." என்றேன் நான்...
"என்ன அசல் படத்துல வர "டோட்டடோய் ...டோட்டடோய்..." பாட்டா என்றான் பிரதீப்..."மவன நேர்ல மட்டும் இப்படி சொல்லி இருந்த, பக்கத்துலேயே இருந்திருந்தாலும்,  விஜயகாந்த் மாதிரி  'chair, மேஜை, சுவர், ceiling  என்று அனைத்திலும் ஏறி உன் தவடைலேயே அடிப்பேன்.." என்றேன் கடுப்பாக..."பாக்ய லட்சுமி" படத்திலிருந்து "மாலை பொழுதின் மயக்கத்திலே..." பாட்டு கேட்கிற என்னைப் பார்த்து...என்று சொல்லி முடிப்பதற்குள்..."செம பாட்டு டா அது....MSV  தானே இசை" என்றான்...  MSV மட்டும் இல்ல....விஸ்வநாதன் ராமமூர்த்தி ன்னு சொல்லு...அவங்க ரெண்டு பேரும் நட்போடு இருந்த சமயம் பின்னி, பெசஞ்சி...பேத்தெடுத்த பாடல் தான் அது..."  அவங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது...ஆனா அவங்க பிரிஞ்சதுல நாம நெறைய நல்ல நல்ல பாட்ட விட்டிருக்கோம்  என்று தோணுது..."உண்மை தான்....அப்படி யோசிக்கையில் இளையராஜா - வைரமுத்து பிரிவு தான் எனக்கு ரொம்ப சோகத்தைக் கொடுக்குது..." என்றான் பிரதீப்..."100% நீ சொல்வது சரிதான்...சரி விடு பிரதீப்...ஆமா உனக்கு பிடித்த பாடல் என்ன?" என்று கேட்டேன்... "நாயகன் படத்தில் புலமைப்பித்தன் எழுதி இளையராஜா இசையமைத்த - நீயொரு காதல் சங்கீதம்" என்றான்...மேலும் தொடர்ந்தான் பிரதீப்...

தமிழ் சினிமாவில், இசையில், மொழியில், காட்சியமைப்பில் இந்த பாடல் ஒரு கவிதை என்றே எனக்கு தோன்றுகிறது... இந்த படலை நான் முதன் முதலில் தூர்தஷனில் வாரம் அரைமணி நேரம் மட்டும் திரைப்பாடல்களைக் காட்டும் ‘ஒலியும் ஒளியுமி’ல் பார்த்ததாய் ஞாபகம் .... நான் ஐந்தாவதோஆறாவதோ படித்துக் கொண்டிருந்தேன். ....பாடலை முதலில் பார்க்கும்போதே ஒரு மாதிரி இருந்தது. அது ஒரு தமிழ் படம் மாதிரியே இல்லை. கமலுக்கு மீசை இல்லை, சரண்யா மங்கம்மா கை வைத்த பாவாடை சட்டை போட்டிருக்கிறார், காட்சிகளில் வரும் இடம் பழக்கமானதாய் இல்லை. அடிக்கடி இரண்டு பேர் எங்கேயோ நடந்து போய் கொண்டே இருப்பார்கள். கமல் சரண்யாவை அடிக்கடி கட்டிப் பிடித்துக் கொள்வார்...."நிறுத்து நிறுத்து ....ஐந்தாவதோஆறாவதோ படித்துக் கொண்டிருக்கும் போது அதென்ன சரண்யா மங்கம்மா கை வைத்த பாவாடை சட்டைய ரசிச்சிருக்க...கமல் கட்டிப்பிடிக்கிற காட்சியே உன்னிப்பா கவனிச்சிருக்க? " என்றேன் விளையாட்டாய்..."டேய் ...அடங்குடா ...என்று கூறி மேலும் தொடர்ந்தான் பிரதீப்.." இசையை பற்றி ஒன்றும் தெரியாதவனும், இந்த பாடலில் லயித்துவிடுவான்...ராஜாவின் இசை மேதைமைக்கு இந்த ஒரு பாடல் போதும்.  பாடல், ஒரு சீரான வயலின்களின் பிரவாகத்தோடு ஆரம்பிக்கிறது. அதன் இசை, காட்டாறு போல பொங்கி வரும் வெள்ளம் ஒன்று ஒரு சின்ன மலை முகடுகளில் சிக்கியது போல் சிக்கி நெளிந்து, குழைந்து, வளைந்து சென்று முடிகிறது. அது முடிந்த இடத்தில் ஒரு தபலா ஆரம்பிக்கிறது. அந்தத் தபலாவின் இசை ஒரு அழகிய சுகமான வீணையின் இசையுடன்  இணைகிறது. ஆஹா, அந்த இசையில் என்ன ஒரு ஆனந்தம். இதை விட ஒரு புதிய உறவின் தொடக்கத்தை எப்படி விளக்க முடியும்?" 

மனோவின் குரல் வழக்கத்தைக் காட்டிலும் கணம் கூடி வழிகிறது. அவருடன் சித்ராவின் எளிமையான இனிமையான குரல் ஒன்று கலக்கிறது. இந்தப் பாடலை கண் மூடிக் கேட்டாலும் சுகம், கண் திறந்து காட்சிகளை பார்த்தாலும் சுகம். Preluds, Interluds மனதை கொள்ளை கொண்டு விடும். Interlud ல் ஒற்றை வயலினுடன் புல்லாங்குழலை இணைத்து ஒரு இசைக் கொண்டாட்டமே நடத்தி  இருப்பார் ராஜா. வீணையும், தபலாவும், அந்த இருவரின் ஜாலம் முடியும் வரை காத்திருந்து சமத்தாய் வந்து சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து கொள்வதை போல் இருக்கும்

பிரதீப்பின் ரசனை கண்டு முதலில் வியந்தேன் நான்..... புரியாத விஷயமெல்லாம் பேசறான்..Prelud  என்கிறான்...interluds என்கிறான் ....எனக்கு தெரியாது அன்று அடிச்சிவிடுரானோ? பயபுள்ள பாட்டையும் இல்ல ரசிச்சிருக்கான்....இவன பொய் தப்ப நெனச்சிடோமே" என்று தோணியது...என் நிசப்தத்தை கவனித பிரதீப், "என்னடா இருக்கியா? " என்றான் ...." ஆமாண்டா ...நீ மேல போ" என்றேன் நான்... சிரித்துக்கொண்டே தொடர்ந்தான் பிரதீப்..."இந்தப் பாட்டின் காட்சிகளை சொல்லியே ஆக வேண்டும். பாடலின் ஆரம்பத்தில் வீணை தொடங்கும் இடத்தில் திருமணம் ஆகி புதிதாய் வரும் தம்பதியரை வரவேற்க அந்த வட்டாரமே கூடி இருக்கிறது. அது ஒரு மங்கிய மாலை. அப்போது தான் வீடுகளில் விளக்குகள் எரியத் துவங்கி இருக்கின்றன. அந்தக் காட்சியே வேறு ஒரு வடிவத்தையும், மனோநிலையையும் அளிப்பதாய் இருக்கிறது. அதுவரை தமிழ் சினிமா அப்படி ஒரு காட்சியை பார்த்ததில்லை என்றே எனக்குப் படுகிறது. அப்படி ஒரு மங்கிய மாலை வேளையில் அவர்களின் உறவு, அவர்களின் வாழ்வு, அந்த நாயகனின் முதுகில் வேர்வைத் துளியுடன் தொடங்குகிறது. [அடடா...இவன் நல்லவனா கெட்டவனா....அநியாயத்துக்கு கவனிக்கிறானே ???] அதோடு பாடலும் துவங்குகிறது.

இந்தப் பாடலின் பாடல் வரிகளும் நானும் இங்கு இருக்கிறேன் என்று எந்த இடத்திலும் வெளியில் துருத்திக் கொண்டு நிற்கவில்லை! அத்தனை இயல்பாய், எதார்த்தமாய், இசைக்கும், காட்சிகளுக்கும் வழி விட்டு ஒரு தெளிந்த நீரோட்டம் போல நிற்கிறது

"மணல் வெளி யாவும் இருவரின் பாதம், நடந்ததை காற்றே மறைக்காதே!" 
அருமையான வரி..

"தினமும் பயணம் தொடரட்டுமே...." வரியில் வரும் காட்சியை பாரு... என்ன ஒரு ஃபிரேம். என்ன ஒரு டோன்! என்ன ஒரு பீல்! கணவனுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அவளின் முகம் என்னவோ செய்கிறது.  என்ன உன்னதமான இசையை கொடுத்தாலும், ராஜாவின் பாடல்களை கந்தரகோலமாய் படமாக்கிக் கொண்டிருந்த பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குனர்களின் மத்தியில் ராஜாவின் இசைக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் காட்சிப்படுத்திய இயக்குனர் மணிரத்னத்தை பாராட்டியே ஆக வேண்டும்! என்ன சொல்ற? என்றான் பிரதீப்....இதற்க்கு மேல் நான் சொல்ல என்னடா விட்டு வைச்ச என்றேன் சிரித்துக்கொண்டே...

இந்த இரண்டு பாடலுக்கும்  உள்ள வித்தியாசத்தை யோசித்துப் பார்க்கையில், நான் ரசித்த பாடல்...ஒரு உறவு தொடரும் முன் முடிந்துவிட்ட  ஒரு இளம் விதவை சோகத்தை, குமுறலை பற்றியது ... என் நண்பனின் ரசனை, புதிதாய் தொடங்கும் ஒரு உறவை, அதன் ஆனந்தத்தை பற்றியது...இரண்டும் வேறு வேறு பரிமாணங்கள், கருத்துக்கள் ஆனால் இரண்டுமே  "மாயக் கம்பளங்கள்"! எத்தனை சுலபமாய் நம்மை நம் கடந்த காலத்துக்கு இட்டுச் செல்கின்றன! 
|
This entry was posted on 8:30 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: