Author: Sathish
•4:42 PM
கொஞ்ச நாட்களாகவே கம்பரையும், வள்ளுவரையும் யாரோ என் மேல் ஏவி விட்டது போல் ஒரே தமிழ் பற்று பீறிட்டிருந்த சமயம்.... ஞாயிறு மதியம் என் மனைவி சமையலறையில் பரபரப்பா எதையோ செய்து கொண்டிருக்கும் நேரம்...ரைஸ் குக்கர் தன்னுள் அடக்கி வைத்திருந்த கோபத்தை வெறித்தனமாக கூச்சலிட்டு அழைக்க " அந்த குக்கரை கொஞ்சம் அடக்கி விடுங்களேன்;" என்று குரல் கொடுத்தாள் என் மனைவி பாத்திரம் துலக்கிக் கொண்டு.... கூப்பிட்ட வேகத்தில் போகவில்லை என்றால், கூச்சலிடுவது குக்கர் மட்டுமிருக்காது என்பதை நன்கு உண்டர்ந்த நான் சமையலறை நோக்கி விரைந்தேன்... அடுப்பு அருகே சென்ற நான் அமைதிகாத்தேன் ஒரு நிமிடம்..."பிரியா குக்கருக்கு தமிழ் லே என்ன?" என்று கேட்ட அடுத்த கணம், ரட்சகன் படத்தில் நாகார்ஜுன் கையில் ஏறும் நரம்பு போல் என் மனைவி கையில் முறுக்கேறுவதைப் பார்த்து, உடனே அடக்கினேன்...குக்கரை....

"ஏம்பா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுது? யாரு உங்கள இப்படி கேட்க வைக்கறாங்க?" என்றாள் சிரித்துக்கொண்டே...விளையாட்டாய்  அந்த உரையாடல் முடிந்தாலும், அன்று முழுவதும் குக்கருக்கு தமிழ் லே என்ன தான் மொழி பெயர்ப்பு என்ற எண்ணம்  என்னுள் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கும் தெரியவில்லை என் மனைவிக்கும் தெரியவில்லை...

யோசித்துப் பார்க்கையில்  பல விஷயங்கள்,.ரொம்பவும் நடைமுறையில், புழக்கத்தில் இருக்கும் / இருந்த  வார்த்தைகளாகட்டும்,அல்லது பழக்க வழக்கங்களாகட்டும்,   பல தகவல்கள் நம்மை விட்டு விலகிக்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன். அதுவும் என்னைப்  போல அயல் நாட்டில் வந்து வாழ்போர் இடுத்து கேட்கவே வேண்டாம்...

மொழி என்பது நாம் வாழும் இடம், சமூகம் மற்றும் தொழில் இதைப் பொறுத்து வேறு படுகிறது. பல இனத்தார் தனக்கெனத் தனி  பேச்சு வழக்குகள் கொண்டிருந்தனர்.. அதனையே நாம் வட்டார வழுக்கு என்கின்றோம்... சமீபத்தில் பார்த்த "கடல்" படத்தில் கையாண்ட வார்த்தைகளை நான் அவசியம் இங்கு பதிவு செய்யவேண்டும் ..."என்ன மக்(க)ளே" என்பது நாகர்க்கோவில் மற்றும் அதனை ஒட்டிய ஊர்களில் சகஜமாக பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று.... "கடல்" பார்த்த எத்தனை பேருக்கு அவை புரிந்திருக்கும் / தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...எங்க ஊர் பக்கம் போகும்போது நான் தமிழ் தான் பேசுகிறேன் என்று நம்ப பலர் தயாராக  இல்லை ... சென்னையில் பிறந்து வளர்ந்ததால் 'சென்னை தமிழ்' எம்மவர்களின் வாயில் சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது... யோசித்துப் பார்க்கையில் வட்டார வழக்கு என்பதை விட்டு எவ்வளவு தூரம் வந்து விட்டோம் என்று மனதில் தோன்ற, அதை தேட ஆரம்பித்தது என் மனம்...

முதல் கட்டத் தேடலில் தமிழின் வட்டார மொழி வழக்குகள் பெரும்பாலும் ஒலிகளில் மட்டுமே மாறுவதை காண முடிந்தது...உதாரணமாக "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், திருநெல்வேலி  பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு" என்றும், யாழ்ப்பாணம் பகுதிகளில் "இங்கை" என்றும், மட்டக்களப்பில் சில பகுதிகளில் "இஞ்ஞ" என்றும் வழங்கப்படுகின்றது....மட்டக்களப்பு "இஞ்ஞ" வை ஒரு பக்க மூக்கை மூடி சொல்லிப் பாருங்கள் "மலையாளம்" வந்துவிடும்...[ அடடே என்ன ஒரு ஆராய்ச்சி!!!]

வட்டார வழக்கு பலசமயம் கொச்சைப்பேச்சு என்று எண்ணப்படுகிறது. இதுபிழை. ஒரு தனிமனிதன் மொழியை சிதைத்துப்பேசினால் அது கொச்சை, ஒரு பகுதியின் மக்கள் முழுக்க அவ்வாறு பேசுவார்களென்றால் அது வட்டார வழக்கு.. (பல பேர் சேர்ந்து செய்தால் தப்பு, தப்பாகாது என்ற அறிய தத்துவம் போல் ....)

என் கல்லூரி நண்பன் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவன்...அவன் பேசுவதை சத்தியமாக யாராலும்  வட்டார வழக்கு என்று வகுக்க முடியாது...வேண்டுமென்றால் நான் அதனை "லூஸ்மோகன் வழக்கு" என்று சொல்வேன்... அப்புறம் என்பதை "அப்பாலிக்கா"  என்பான்... பெரும்பாலான சொற்களை குக்கரில் போட்டு 4 -5 விசில் விட்டது  போல் குழைத்து பேசுவான்... [மீண்டும் குக்கரா? அதுக்கு தமிழ் லே என்ன? யாரவது சொல்லுங்களேன்...ஹி ஹி ஹி ... 'சமைக்கலம்' என்றார் என் 'இன்டர்நெட் புலி' நண்பர்  ஒருவர்...] மொடாக் குடிகாரர்களுக்கு என்று தனியாக பாஷை இருப்பதாகவும், அவை பெரும்பாலும் 'ழ'கரத்தில் இருக்குமென்றும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா கூறியது நினைவுக்கு வருகிறது.... 

வட்டார வழக்கில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஒரு பகுதியின் இயல்பான உறுப்பினரால் இயல்பாக கருதப்படும் அதே விஷயம் அல்லது சொற்கள் பிறரால் விபரீதமாக உணரப்படும். உதாரணமாக,  மயிர் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.. மயிர் என்றால் செம்மொழியில் முடி. தெரியாத்தனமா கூட குமரி மாவட்டம் (பெரும்பாலும் என்ன மாவட்டங்களிலும்) போய் மயிர் என்று சொல்லிடாதீங்க...மயிர் மற்றவர்களை திட்ட மட்டுமே பயன் படுத்துற சொல்லாகிவிட்டது....


வட்டார வழக்குகளை நூல் பிடித்தவாறே சில தூரம் செல்லலாம் என்று போனால் தலை சுத்துதுடா சாமி...அப்படியா என்றா கேட்கறீங்க? சரி... என் கை பிடிச்சு வாங்க...கொஞ்ச தூரம் போய்  பார்ப்போம்... தூயதமிழில், முடி என்றால் மகுடம். மகுடம் என்றால் நெல்லைவழக்கில் குடம் போலிருக்கும் ஒருவகை மேளம். இதே மேளத்தை குமரி மக்கள் களேபரம் என்பார்கள்... சம்ஸ்கிருதம் பேசுபோறிடத்து மேளம் என்றால் கூந்தல் என்று அர்த்தம்... கூந்தல் என்றால் குமரி வட்டாரவழக்கில் ஆடிமாத மழைமூட்டம். ஆனால் நெல்லையில் அதற்குப் பனைநுங்கு என்று பெயர்…நுங்குதல் என்றால் குமரியில் அடிபின்னுதல். பின்னுவது என்றால் மையத்தமிழ்நாட்டில் முடைதல். முடை என்றால் பணம் இல்லை என்கிறது  மதுரை வழக்கு... இப்போ சொல்லுங்க தலை சுத்துதா இல்லையா?

நாகர்கோவில் பக்கம் 'சுண்டு' என்றால் உதடு, சக்கை என்றால் பலாப்பழம்...சென்னை வாசியான எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசா தோணுது...சிலசமயம் நாகை மக்கள் 'முடிஞ்சு', 'வரட்டு', 'இருக்கட்டு '  என்றெல்லாம் பேசும்போது 'ஐயா! கடைசியில் இன்னும் ஒரு எழுத்து இருக்கே' என்று சொல்ல தோன்றும் ....

நெல்லை மாவட்டதிலிருந்து நெறைய பசங்க என் கூட படிச்சாங்க...அவங்க வட்டார பாஷை எனக்கு ரொம்பவே பிடிக்கும்... சென்னை லே 'என்னடா' என்னப்பா' என்பது அங்கே 'என்னல', 'என்ன மக்கா'  என்றாகிறது...அது போக வார்த்தைகளின் கடைசியில் 'டே' சேர்ப்பதும் அங்கு சகஜம் ...உதாரணமாக 'வருதுடே' 'போகுதுடே' என்று சொல்லும் போது எக்ஸ்ட்ரா 'டே' ஒருவித உரிமையை, நட்பை குறிக்கிறது...[அடடே!!!] 'நீ கூட ஒத்தையிலே நிக்கறடே....' என்ற வைரமுத்துவின் கடல் பாடல் வரிகள் ஒரு எடுத்துக்காட்டு...

 வட்டார வழக்குத் தேடுதல் வேட்டையில், பல இடுகைகளில், வலையுலகில் பல தகவல்களை காண முடிந்தது... தமிழகத்தின் தெற்கு பகுதிகளில் வாழும் மக்கள் தான் பேசும் மொழியே தமிழ் என்றும், மற்றன தமிழே அல்ல  என்று கருதுகின்றனர் ...  எம்பளது  என்று கூறிப் பழகியே தஞ்சாவூர் மக்கள் "எண்பது" என்று சொல்பவர்களை நகைப்பர்கள். அவ்வாறே, திருநெல்வேலியை திண்ணவேலி என்று சொல்லும் அன்னியர் மொழிவளமில்லாதவர்கள் என்பது நெல்லையின் நம்பிக்கை. ஊர் சார்ந்து மட்டுமல்லாது, வட்டார வழக்கு சாதி சார்ந்தும், மதம் சார்ந்தும் மாறுபடுகிறது. உடம்பெங்கும் இதயத்துடிப்பு முக்கியமானாதாக இருப்பினும், மணிக்கட்டில் மிளிரும் நாடித்துடிப்பு போல வட்டாரவழக்கு என்பது  தனித்து, சிறப்பாக வெளிப்பாடு கொள்கிறது. அதில் நுண்ணிய பொருள்வேறுபாடுகளைப் பார்ப்பவர்கள் வட்டாரவழக்கு என்பதின் பெருமையை உதாசினப்படுத்த மாட்டார்கள்...

ஆராய்ந்து பார்த்தால் வட்டார வழக்கின் ஆழத்தை வரையறை செய்வதில் ஆய்வாளர் நடுவே கடுமையான விவாதமாக உருவெடுத்து வருகிறது... மனைவியர் கணவனை அழைக்கும் வட்டார வழக்குச் சொற்களை சேகரித்த ஞா.ஸ்டீபன் அவர்கள் இஞ்சேருங்க, ஏங்க, ஏனுங்க, யானுங்க, பாருங்க, இவியளே, கேட்டேளா போன்ற நானூறுக்கும் மேற்பட்ட சொற்களைப் பட்டியல் போட்டிருக்கிறார். 

 பிழைப்புக்காக அயல்நாட்டில் பணிபுரியும் நாம், வட்டார வழக்கை விடுத்து வெகுதூரம் செல்கிறோம். வட்டார வழக்கு தமிழின் சிறப்பம்சம். நம் மண்ணின் மணம்  வீச வட்டார வழக்கு பெரும் பங்கு வகிக்கிறது என்பதனை கண்டிப்பாக மறந்துவிடக்கூடாது...நம் குழந்தைகள் நம் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது... தாய் மொழியல்லாது பிற மொழிகளை ஆர்வமாக கற்ப்போம்; தவறில்லை..ஆனால் தனித்துவம் வாய்ந்த நம் வட்டார வழக்கினை தவறாது உபயோகிப்போம்... இல்லையேல் வருங்காலம் நம் மொழியின் அடையாளத்தை 'இறந்தகாலம்' ஆக்கிவிடும்....என்று எழுதி பதிவை முடிக்கும் பொது, எங்கிருந்தோ 'இஞ்சேருங்க' என்று ஒரு குரல்...கையில் காப்பியுடன் பிரியா...' என்ன சொன்ன? என்ன சொன்ன?' என்று கேட்டேன்....அடடா இது என்ன வம்பா போச்சு...'என்னங்க' என்று சொன்னேன் என்றாள்  என் மனைவி, இல்லத்தரசி, அகமுடையாள், வூட்டுக்காரி , இல்லக்கிழத்தி, சம்சாரம், பெஞ்சாதி, ஆத்துக்காரி என் செல்ல ராஜாத்தி !!!