Author: Sathish
•9:42 AM
முன்குறிப்பு:

தீபாவளி பற்றிய பதிவை எப்போ எழுதறான் பாருன்னு அவசரப்பட்டு  யாரும்  திட்டாதீங்க...கொஞ்சம்  உடம்பு  சரியில்லை... எந்த நேரத்துல கிறிஸ்டல், ஸ்டோன்ஸ்  னு கதை எழுதுனேனோ எனக்கு கிட்னி ஸ்டோன்ஸ் வந்து பெரிய அவஸ்தை.. ச்ச்சப்பா.. முடியல.... அதில்லாம  வேலை  பளுவும் அதிகம்..  ஆரம்பிச்சதென்னவோ தீபாவளி சமயம் தான்... முடிக்க  இவ்வளவு  காலதாமதமாகி  விட்டது ...[நல்ல வேலை அடுத்த தீபாவளி இன்னும் வரல...ஹி ஹி ஹி ]

வழக்கம் போல நைட் லேட்டா வேலை செஞ்சி, காலைலே  நல்ல தூக்கம் அன்னிக்கு... யாரோ என்னை முதுகில் தட்டி [செல்லமாதான்] எழுப்புவதை அரை தூக்கத்தில் உணர்ந்தேன்..வழக்கத்துக்கு மாறாக என் தர்மபத்தினி எனக்கு முன்னே எழுந்து குளிச்சி என்னை எழுப்பிக் கொண்டிருந்தாள்... அரை கண்ணில் மணி பார்த்தேன் அதிகாலை 8 : 00 மணி.. மெல்ல கண் விழித்த நான் சற்று கிண்டலாக, "குட் மார்னிங் ...என்ன டா உடம்பு சரியில்லையா?... சீக்கிரம் எழுந்துட்டே " என்று கேட்ட பொழுது அவள் கண்களின் தென்படும் கோபத்தை ரசித்தவாறே எழுந்தேன்..."குட் மார்னிங் டியர்...நல்ல நாளு அதுவுமா ஏன் .காலங்காத்தாலே வம்புக்கு வறீங்க?...இன்னிக்கு   தீபாவளி மறந்தாச்சா? ...ஹாப்பி தீபாவளி..." என்றாள் என் மனைவி...என் உள்ளத்தில் ஒரு இனம் புரியாத கிளர்ச்சி..."ஹே ...ஹாப்பி தீபாவளி...டா....நைட் ஆபீஸ் கால் முடிச்சு படுக்கவே ரொம்ப லேட் ஆயிடுச்சு,,." என்று சொல்லிக்கொண்டே அவள் அணிந்திருந்த கருப்பு நிற ஜீன்ஸ் அண்ட் சாம்பல் நிற  டிஷர்ட் பார்த்தேன்....என்னை பற்றி நல்லாவே தெரிஞ்சவளாசசே...  சற்று கோபமாய், "அமெரிக்கா லே புதுப் புடவைக்கு நான் எங்கே போறது? புது டிரஸ் போடாம, இருக்க பழைய சேலை கட்டிக்கவா? சொல்லுங்க ..." என்றாள். லக்ஷ்மி வெடி எப்பெக்ட் தெரிந்தது அவள் குரலில் .. என் கண்ணுக்கு கிராபிக்ஸில் ஒரு செகண்ட் விஜயகாந்த் மாதிரி மாறி மீண்டும் என் மனைவியாய் காட்சி கொடுத்தாள்... அவள் சொல்வதிலும் நியாயம் இருந்தது.... இருப்பினும் அவள் காதில் விழுமாறு  "தீபாவளி ஆரம்பிச்சிடுச்சு டோய்" என்று கூறிக் கொண்டே பாத்ரூம் நோக்கி சென்றேன்.

பள்ளி விடுமுறை விடுகிற எந்த ஒரு நிகழ்வா இருந்தாலும் சிறு வயதில ரொம்ப ஆர்வம் இருக்கும்...அதுவும் தீபாவளி பண்டிகை என்றால் சின்ன வயசுல வர ஆர்வமும், மகிழ்ச்சியும் கட்டுக்கடங்காத ஒன்று. அப்பேர்ப்பட்ட தீபாவளி திருநாளா இன்று என யோசிக்கும் அளவுக்கு இருந்தது என்னுடைய அமெரிக்கா தீபாவளி...காலைலே எழுந்து நல்ல குளிர் லே, தலைமுழுகி, கட்டின டவலோட ஓடி நான் தான் எங்க தெருவுலே முதல் சரம் வைப்பேன்...[படிப்ப தவிர மீதி எல்லாத்துலேயும் முதல...ஹி ஹி ஹி ] அடுத்து புது டிரஸ் போட்டு, அம்மா பண்ணுற பூஜையே அவசர அவசரமா முடிச்சி ஓடிவர   அதே  நேரம் என் அப்பா,  டிவி லே மங்கள இசை நிகழ்ச்சியே தொடங்கிடுவார் ; அம்மா தோசை, இட்லி , ஆட்டுக்கால்னு அசத்துவாங்க..ஒரு புல் கட்டு கட்டிட்டு, டிவி லே பட்டி மன்றம், புதுப் பாடல்கள் என்று வரிசையாக தீபாவளி நிகழ்ச்சிகள் அரங்கேற விளம்பர இடைவெளிலே முதல்  நாளே தம்பி தங்கச்சியோட சண்டை போட்டு பிரிச்சி வச்ச பட்டசுகல   வெடிச்சி ....ம்ஹ்ஹ்ஹஹு... இதெல்லாம் யோசிச்சுகிட்டே  டைம் பார்த்தா மணி 8:15 ..ஐயோ status கால், ஸ்டான்டப் கால் னு பல கால் என் நினைவுக்குவர ..அவசர அவசரமா குளிச்சி முடிச்சு வெளியே வந்தா, என் மனைவி எனக்கு ஒரு புது ஷர்ட் வாங்கி வச்சிருந்தா..."ஹே... தேங்க்ஸ் மா...நல்ல இருக்குனு" சொல்லி அதை அணிந்து,  என்னோட breakfast  டிரைவ் பண்ணிடே சாப்பிட்டுகறேன்னு டோஸ்ட் பண்ண பிரட் எடுத்துட்டு ஆபீஸ் கெளம்பினேன்...என் மனைவி என் கையில் மற்றொரு பாக்ஸ் ஐ தின்னித்து, "அத்தை செஞ்ச அதிரசம், முறுக்கு கொஞ்சம் வச்சிருக்கேன்...ஆபீஸ் friends க்கு குடுங்க: என்றாள்.. கார்லே போகும்போதே  கால் லே join பண்ணி, டீம் லே இருக்க 34 பேரும் சேர்ந்து  யார் யார் எந்த ஆணியே புடுங்கறது ன்னு ஒரு discussion ...கால்லே இருக்கும் போதே மீண்டும் பழைய நினைவுகள் என்னை உரச ஆரம்பித்தது....

சின்ன வயசில பட்டசுல இருக்க ஆர்வம், அந்த வெடிச்சத்தாமோ, இல்ல அதில் வரும் வர்ண ஜாலங்கள் மட்டுமில்ல ...  யார் வீட்டுல வெடி வெடிச்சி அதிக பேப்பர்களும், வெடி குப்பைகளும் சேர்ந்திருக்குன்னு போட்டி வேறு.....என் தம்பியோ , தங்கையோ என் வீட்டு வாசல விட்டு சற்று தள்ளி வெடிச்சாலும் எனக்கு ரொம்ப கோவம் வரும்..ஒரு வெடிக் குப்பைகளையும் விடாம. மெனக்கெட்டு என் காலாலே எல்லாத்தையும் தள்ளி என் வீடு முன்னாலே போடுவேன்....அப்படியே யாரேனும்  பார்க்கிறார்களான்னு நோட்டம் விட்டுக் கொண்டே, பக்கத்துக்கு அக்கத்து வீட்டு வெடி குப்பைகளையும் என் வீட்டின் முன்னே சேர்ப்பேன்..[ரொம்ப பெருமை...த்தூ..] நெனச்சி பார்த்தா சிப்பு சிப்பா வருது...ஹி ஹி ஹி [உனக்கு மட்டுமில்லடா இதுக்கப்புறம் ஊரே உன்னை பார்த்து சிரிக்கப் போகுது...லூசுப் பயலே...] யோசித்துகொண்டிருக்கும் வேளையில் ஆபீஸ் வந்துட்டேன்...நானிருக்கும் Virginia ஸ்டேட்ல் இந்தியர்கள் மிக அதிகம்...அதுவும் தெலுங்கின மக்கள் முக்கால்வாசி பேர்...பயலுங்க பக்கா அமெரிக்கா வாசிகள் மாதிரிதான் திரிவார்கள்...அண்ணன், தம்பி, மனைவி, மனைவ்யோட தம்பினு தன் சொந்தகாரப்பசங்க எல்லோருக்கும் ஒரு வேலைய பார்த்து இங்கேயே செட்டில் செஞ்சி ஒரு சின்ன திருப்பதி மாதிரி ஆக்கி வச்சிட்டாங்க...நம்ம ஊர்லே தெலுங்கான வருதோ இல்லையோ இங்கே, Virginia லே ஒரு தெலுங்கானவ  உருவாக்கி ஒபாமாவ ஒபாமா ராவ் / ஒபாமா ரெட்டி ன்னு மாத்துற காலம் வெகு தொலைவில் இல்லை...;) பார்கிங் லாட்லே ஆரம்பிச்சி என்னோட டெஸ்க் செல்லுகிற வரை அனைவருக்கும் போலிச் சிரிப்பை விற்பனை செய்தவாறே "குட் மார்னிங்" சொல்லிக் கொண்டே என் இடத்தை சென்றடைந்தேன்...ஒட்டு மொத்தமாக அனைவரும் தீபாவளியை மறந்திருந்தனர். மொக்கையா பேசிட்டுப் போனாங்களே தவிர  ஒரு வாழ்த்துகளும் பரிமாறிக்கொள்ளவில்லை.... மதியம் வரை பொறுமையாகவே இருந்த நான், என் மனைவி கொடுத்தனுப்பிய snack பாக்ஸ் எடுத்து, :" ஹே... இன்னிக்கு தீபாவளி லே...அதான் snacks கொண்டுவந்தேன்...என் அம்மா prepare பண்ணது taste பண்ணி பாருங்க" என்று கொடுத்தேன்..."ohh yeah! I totally forgot ...Probably I willl call my Mom today..." னு நம்ம அக்னி நட்சத்திரம் "கார்த்திக்" இங்கிலீஷ் பேசராபுல வாயிலே கூழங்கள்ள போட்டுக்கிட்டு பேசுகிற மாதிரி ஒருத்தி சொன்னா...இதான் அமெரிக்கா ஆகசென்ட் ... தீபாவளிக்கு ஒரு வாரம் மின்ன வந்த "ஹலோவீன் [Halloween] பண்டிகையா விமர்சனமா கொண்டாடிய பல பேர் நம்ம ஊரு தீபாவளியே சுத்தமா  மறந்திருந்தார்கள்...  இவங்களுக்கு அதிரசம், முறுக்கும் ரொம்ப முக்கியமா? என்ற கேள்வி என்னுள்...ச்சே என்ன கொடுமை சரவணா...தீபாவளி நாளும் ஒரு சராசரி நாளாகவே கழிய, சாயந்திரம் 5:30 வீட்டை வந்தடைந்தேன்.... என் மனைவி அடுப்பங்கறையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள்...முகம் கழுவி பிரெஷா வந்து சோபா லே உடகார்ந்தா, ஒரு தட்டுலே சுசியம், அதிரசம் னு மீண்டும் தீபாவளிப் பலகாரங்கள்...மனதினுள் ஒரு சந்தோசம்...நம்ம வீடு தீபாவளி மாதிரி இருக்குனு நெனசிகிட்டு, சுசியம் சுவைக்க ஆரம்பித்தேன்... "சாப்பிட்டுவிட்டு பக்கவது வீட்டுக்கு போய் பலகாரம் கொடுத்து வரலாமா?" என்றாள் என் மனைவி...."ஒன்னும் வேணாம். எல்லாம் அமெரிக்கா வாசிகள் ஆயிட்டாங்க ஹல்லோவீன், Valentine's டே னு இருப்பவர்களுக்கு  எதுக்கு தீபாவளி பலகாரங்கள்?" னு கேட்டு முடிக்கும் முன், "நாம் இந்த புது வீட்டுக்கு வந்து மூணு மாசமாகுது...இன்னும் ஒரு வருஷம் இங்கே தான் காலத்த ஓட்டனும்...நீங்களும் ஆபீஸ் போய்ட்டா  பக்கத்துக்கு அக்கத்து வீட்லே இருப்பவர்களை நான் அனுசரித்து நடந்தாதான் ஒரு அவசரத்திற்கு  ஏதாவது உதவி பண்ணுவாங்க...நான் தனியா  போக முடியாது... நீங்களும் வாங்க"  என்று என் மனைவி வற்புறுத்தினாள்.. சரி என்று கெளம்பி பக்கத்துக்கு வீட்டுக்கு போனோம்...வீட்டினுள் "தாறங்கம் தாறங்கம்" னு ஏதோ ஒரு பாட்டு "youtube " ல் ஓடிக்கொண்டிருந்தது....எங்களை வரவேற்று உட்கார செய்த அதே நேரம், அவசர அவசரமாக அவர்  கை ரிமோட்டை தேடிப்ப் பிடித்து, "Dora the explorer " போட்டுவிட்டு, பிறகு அவர்  எங்களுடன் பேச ஆரம்பித்தார்... என் மனைவி தீபாவளி பலகாரங்களை கொடுத்தாள். ..." After 3 years, என் மனைவியும், குழந்தையும் இந்தியா போய், போன  வாரம் தான் திரும்ப வந்தார்கள்...சோ தீபாவளிக்கு ஒன்னும் பண்ணல " என்றார். அவர்.. "ஒஹ்ஹ ஓகே..ஒரு வாரம் தள்ளி வந்திருந்தா, உங்க குழந்தை அங்கே தீபாவளி கொண்டாடி இருப்பாளே...தீபாவளி அனுபவத்த மிஸ் பண்ணி இருக்க மாட்டா லே " என்று கேட்டேன் ..." நீங்க வேற... அவளுக்கு இந்தியா climate , சத்தம், polution இதெல்லாம் சுத்தமா பிடிக்கல...அழுது கொண்டே இருந்தா ...இப்போ தான் அவளுக்கு எல்லாம் செட் ஆகி இருக்கு" என்றார்....இதில்லென பெருமை...என்று எரிச்சல் எனக்கு.....என் மனைவி வேறு சும்மா இல்லாம அந்த குழந்தையிடம் ," உனக்கு இந்தியா பிடிக்கல? " என்று கேட்க அந்த குழந்தை "ஐ லவ் அமேழிக்கா...." என்று கூறியது....வாயிலே கூழங்கள்ள போட்டுக்கிட்டு பேசுகிற அதே அமெரிக்கா ஆகசென்ட்..." நான் சொல்ல லே" என்று ரொம்ப பெருமையாய் அவர் என்னைப் பார்க்க நானும் என் மனைவியும் அவர்களிடமிருந்து விடை பெற்றோம்....

அமெரிக்காவிலிருந்து சென்ற ஒபாமா தீபாவளியை சிறப்பாக கொண்டாட, இங்கே பிஜிலி வெடிக்கு கூட வழியில்லாம நான்.... என் மனது ஏனோ தெரியவில்லை, இருக்கமாய் இருப்பதை உணர்ந்தேன்...