Author: Satya
•5:07 AM
1
அவதார்
சமீபத்தில் நான் பார்த்த ஆங்கில படத்தில் என்னை ரொம்பவே கவர்ந்த படம் இந்த "அவதார்". James Cameron என்றால் பிரம்மாண்டம் என்பதை மீண்டும் நிறுபித்திருகிறார்.  இதுல இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த படம் TITANIC அடுத்து யோசித்த படமாம். அந்த சமயத்தில் Cameron தான் யோசித்த அளவிற்கு டெக்னாலஜி இல்லை என்று தள்ளி போட்டு விட்டாராம். எப்படி தான் இப்படிலாம் யோசிப்பாங்களோ? படத்திற்கு படம் வித்யாசம், விஞ்ஞான வளர்ச்சி, மாறுபட்ட கோணங்கள் அடேங்கப்பா!!! நம்ம சினிமா எப்ப இதுபோல முன்னேற போகுதோன்னு ஏக்கம் எனக்கு. 2154 ம்  வருடத்திற்கான pandora எனப்படும் ஒரு வகை கோள்களில் இருக்கும் ஜீவராசிகளின் கதை இந்த அவதார். Dreamwalk, வினோத பறவைகள், மிருகங்கள் என பல்வேறு இடங்களில் மிரள வைத்திருக்கிறார் மனுஷன். கதை ஆரம்பித்தது முதல் இறுதி வரை விறுவிறுப்பாக, காதல், செண்டிமெண்ட், ஆக்சன் என எல்லா அம்சங்களும் நிறைந்த படம் அவதார். என்னை பொறுத்தவரை மிகவும் எதிர்பார்த்த 2012 படத்தை விட அவதார் பல மடங்கு பிரமாதமான படம் என்பேன். என் கூட வேலை பார்க்கிற ஒரு தெலுங்கு பய கிட்ட அவதார் தமிழ்லே 1995 லே ரிலீஸ் ஆயிடுச்சு, நாசர் டைரக்ட் செஞ்சி நடிச்சிருக்கார்; அந்த படத்தோட ரீமேக் தான் இந்த அவதார் ன்னு சொன்ன என்னை Cameron மன்னிப்பாரா? ஹி ஹி ஹி !!!

2
வேட்டைக்காரன்
அவதார் பட விமர்சனம் எழுதின கையோட இதையும் எழுத உண்மையாவே எனக்கு கை கூசுது! படிக்கற காலத்தில [நீ எப்போ படிச்ச? ] நான் ஒரு விஜய் ரசிகனாகவும் இருந்திருகிறேன்னு நெனச்சா எனக்கு பப்பி ஷேமா இருக்கு. விஜய் சார் உங்களுக்கு கால் சீட் பிரச்சனையா? அப்புறம் எதுக்கு உங்களோட "நாளைய தீர்ப்பு" லே இருந்து "வில்லு" வரை உள்ள படத்திலிருந்து எல்லா சீன்களையும் தொகுத்து "வேட்டைக்காரன்" ரிலீஸ் பண்ணீங்க? "புலி உரும்புது" பாட்ட கேட்டு கில்லி மாதிரி படம் வரும் ன்னு ரொம்ப எதிர்பார்த்தேன். US லே நான் இருக்க ஏரியா லே எங்கே ரிலீஸ் ன்னு தேடிபிடிச்சு வச்சிருந்தேன் !!! நல்ல வேலை ; டாலர் தப்பிச்சுது.நெட்லே  ப்ரீ யா கூட பார்க்க முடிலே டா சாமி....விஜய் சார்...உங்க படம் நல்லா இல்லன்னு அவ்வளவு சீக்கிரம் என் வாய்லே வராது...நீங்க ஒரு நல்ல டான்சர், நல்லா fight பண்ணுவீங்க...பட் ஏன் நல்ல கதை செலக்ட் பண்ண மாட்டேன்றீங்க?  இதே மாதிரி வண்டி ஒடுச்சினா திரும்ப சங்கவிய heroina போட்டு "ரசிகன்" லே இருந்து ஸ்டார்ட் பண்ணவேண்டி இருக்கும் ! சொல்லிபுட்டேன் பார்த்து செய்ங்கோ !!! சங்கவி சொன்னதும் "சில் என சில் என நீர்த்துளி பட்டு" பாட்டு எத்தனை தடவ சவுண்ட் கூட இல்லாம பார்த்திருக்கிறேன் னு நெனச்சி பார்கிறேன். [ரொம்ப பெருமை.. மானங்கெட்டவனே ன்னு திட்ரவங்க நெஞ்சுல கை வச்சி சொல்லுங்க நீங்க பார்க்கவே இல்ல ன்னு]

3,
ரேணிகுண்டா
கல்லூரி, வெண்ணிலா கபடி குழு வரிசையில் புது முகங்களை கொண்டு யதார்த்தமாக எடுத்த படம் ரேணிகுண்டா. 

ஏற்கனவே சொன்ன கதையே ஆனாலும் படம் போகிற போக்கு நல்லா 
தான் இருக்குங்கோ. சின்ன பசங்க நாலு பேரு இந்த சமுதாயத்துல எப்படி 
ஒரு தப்பான பாதையில போய் கெட்டு அழியறாங்க என்பதை டைரக்டர் நல்லா 
சொல்லி இருக்கார். "டப்பா" கேரக்டர் பேசுற பாணி சூப்பர். கதாநாயகி சூப்பரா 
இருக்கா. படம் முடிஞ்சும் அவ முகம் இன்னும் ஏன் மனசில இருக்கு?
[டேய் டேய் ....ஏன்டா ?] தொடர்ந்து நல்ல திரைகதை இல்லாத காலகட்டத்தில் 
"ரேணிகுண்டா" சற்றே ஆறுதல். 

புதுசா படம் பண்ணும் டைரக்டர்களே, தயாரிபாளர்களே, ஹீரோக்களே - ரசிகர்களாகிய 
நாங்கள் வெறும் கதாநாயகன், கதாநாயகி மட்டும் பார்த்து வெற்றி படமாக்கிய 
நாட்கள் மலையேறி போச்சு !! நல்ல கதை இருந்தால் நாங்கள் ரசிக்கத்தான் செய்வோம். 
மாறுபட்ட கோணம் என்றால் தமிழ்லே கமல் தான் என்பதை மாற்றி அமையுங்கள்...
ரசிகர்களான எங்களுக்கே இவ்வளவு ரசனை என்றால், படைப்பாளியான உங்களுக்கு 
எவ்வளவு ரசனை இருக்கும்? அதை வெளியே கொண்டு வாருங்கள்.

பிறக்கவிருக்கும் புது வருடம் தமிழ் திரையுலகின் வெற்றி வருடமாக இருக்கட்டும்....

 


Author: Satya
•10:22 PM
கட்டுரைகள், கவிதைகள் சில எழுதிய அனுபவம் இருந்த போதும் சிறுகதை எழுத வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு முதன் முதலில் அரங்கேறுகிறது இன்று...பிழை இருப்பின் திறுத்திக்கொள்வதற்கான முதற்படி உங்கள் வாயிலாக...

மயக்கத்திலிருந்து மெல்ல கண் திறக்க முயற்சித்தான் மதன். கட்டப்பட்டிருந்த தன் கைகளில் வலி..தான் இருக்கும் இடம் சற்றும் பறிட்சயப்படாத இடம் என்பது மட்டும் புரிந்த நிலையில், எப்படி இங்கு வந்தோம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, மங்கிய வெளிச்சத்தில் மூன்று உருவங்கள்  தன்னை நெருங்கி வர கண்டான். "என்ன மதன் எப்படி இருக்கீங்க?" என்றது ஒரு உருவம். "ந... நான்...  நல்லா இருக்கேன்" மதன் தன் குரலில் நடுக்கம் உணரக்கண்டான். "ஒன்னும் பயப்பட வேண்டா மதன். உங்களை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளும்படி எங்கள் இயக்கம் அறிவுறுத்தியுள்ளது. நீங்களும் எங்களுக்கு வேண்டிய தகவல்களை தந்தால் ரெண்டு மூணு நாள் லே முழுசா வீடு போய் சேரலாம். பசிக்குதா? சாப்பிட ஏதாவது வேண்டுமா? சகா மதன் சார்க்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கிவா" என்று சொல்லும்போதே குறுக்கிட்ட மதன், "இல்ல ஒன்னும் வேண்டாம். நான் ஒரு அரசு அதிகாரி. நீங்கள் என்னை கடத்தி வைத்திருப்பது என் அரசாங்கத்திற்கு தெரிந்தால் உங்களை சும்மா விட மாட்டார்கள்; ஒழுங்கா என்னை விட்டுடுங்க" என்றான். "நீங்கள் வெறும் அரசு அதிகாரியா? மத்திய உளவுத்துறையை சார்ந்த கணினித்துறையின் மேலாளர் அல்லவா நீங்கள். நாட்டின் பாதுகாப்பை சார்ந்த முக்கிய துறை உங்கள் கண்காணிப்பிலே இருக்கும் போது நீங்கள் சாதாரனமான ஆள் இல்லை என்று எங்களுக்கு தெரியும்" தூரத்தில் ஒலித்தது ஒரு பெண் குரல். திடுக்கிட்டுத் திரும்பினான் மதன். இந்த குரல் எனக்கு மிகவும் தெரிந்த குரல்; நன்கு பறிட்சயமான குரல்.யாரவள்? யோசித்து முடிக்குமுன் அருகில் வந்தது அந்தப்பெண்ணுருவம். மல்லிகா...என் காதலி மல்லிகா... உடைந்துபோனான் மதன்.

"மல்லிகா நீ... நீ..  எப்படி இங்கே?" என்ற கேள்வி முடியும் முன், மதன் அருகில் நெருங்கிய மல்லிகா "மதன் என்னுடைய 13ம்  வயதிலிருந்து நான் இந்த இயக்கத்தில் இருக்கிறேன். உங்கள் கட்டுபாட்டுக்குள் இருக்கும் நாட்டின் முக்கிய ரகசியங்களை பெற உங்களை கடத்த திட்டம் தீட்டி நான் பழகினேன்; தனிமையில் சந்திப்பதாய் வரச்சொன்னேன்...இந்த கம்ப்யூட்டர் இன்டர்நெட் வசதி கொண்டது. எங்களுக்கு வேண்டிய தகவல்களை கொடுத்துவிட்டால் நீங்கள் ஒரு கஷ்டமும் இல்லாமல் வீடு திரும்பலாம்" என்றாள். காதலிபதாய் சொல்லி என்னை ஏமாற்றி விட்டாயடி! மதனின் இதயத்தில் இடி; கண்களில் மழை. "மல்லிகா..வேண்டாம் இந்த விபரீத முயற்சி. நான் சொல்வதை கேள்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பின்னாலிருந்து ஒருவன் மதனின் பின்மண்டைக்கு துப்பாகியால் குறி வைத்தான். பதறிப்போன மதன் மல்லிகா சொன்ன கணினியை நெருங்கினான். அங்கீகரிக்கப்படாத இடத்திலிருந்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் அடுத்த பத்தாவது நிமிடம் IP வாயிலாக தன்னை தேடி அதிரடிப்படை வரும் என்பதை அறிந்து கம்ப்யூட்டர்ஐ நெருங்கி தகவல்களை டவுன்லோட் செய்ய ஆரம்பித்த வண்ணம் அவன் நினைவுகள் சற்றே பின்னோக்கி சென்றன. 

சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன், ஒரு பொறுப்பான பதவியில் வேலை செய்துவந்தாலும், தெரியாத பெண்களிடம் chat செய்வது ஒரு வாடிக்கையாய், இனம் புரியாத ஒரு இன்பமாய் பொழுதுபோக்காய் இருந்துவந்தது மதனுக்கு. அப்படி அறிமுகமானவள் இந்த மல்லிகா. மல்லிகாவின் நட்பு கிடைத்து ஐந்தாறு மாதங்கள் இருக்கும். யதேச்சையாய் yahoochat  மூலமாக அறிமுகமான மல்லிகா நெருங்கிய தோழியாக மாறிப் பின் காதலியாக உருவெடுத்தாள். தான் ஒரு விதவை என்றும் ஸ்ரீலங்காவில் வசிக்கும் ஒரு தமிழ் பெண்ணென்றும் அறிமுகமாகி தினந்தோறும் chatல்  மணிக்கணக்காய் உரையாற்றி வளர்ந்த நட்பு காதலாக உருமாறி இரண்டு வாரமாகிறது. சிங்களத்தமிழில் கொஞ்சிப்பேசிய மல்லிகவா இன்று ஒரு இயக்கத்தை சார்ந்த பெண்ணாக என் முன் நிற்ப்பது? இத்தனை நாள் காட்டிய நட்பு, காதல் அனைத்தும் பொய்யா? ஆயிரம் கேள்விக்கணைகள் மின்னலெனப் பாய்ந்தது மதனின் மனதில். 

 இன்னும் அதிர்ச்சியிலிருந்து மதனால் மீளமுடியவில்லை, மல்லிகாவை வெறுக்க முடியவில்லை. அவள் பேசிய காதல் மொழிகள் பொய் என்பது புத்திக்குத் தெரிந்தபோதும் மனம் அதனை மறுத்தது; கண்களின் ஓரம் நீர் வழிவது நின்றபாடில்லை. அடுத்த சில நிமிடங்களில் சரமாரியான துப்பாக்கி சத்தங்கள். அதிரடிப்படை அந்த இடத்தை சுற்றி வளைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில்  அந்த இடம் யுத்த பூமியாக மாறியது. அதிரடிப்படையினர், மல்லிகாவை சுட்டுவிட போகிறார்கள் என்ற பயத்தில், அவளை காக்கும் பொருட்டு பாய்ந்த மதனை மல்லிகாவின் துப்பாக்கி பதம் பார்த்தது. நிலை குலைந்து அவளை பார்த்தவண்ணம் விழுந்தான் மதன். முதல் முறையாக மல்லிகாவின் கண்களில் கண்ணீர். அதில் உண்மை இருந்தது. தான் செய்த துரோகத்திற்கு வருந்தி "என்னை மன்னித்துவிடு மதன்" எனக் கூறும்போது மதனும் தன் மனைவி மாதவிக்கு மன்னிப்பு கேட்க மறக்கவில்லை. மூடாத அவன் கண்களிலும் துரோகச் சுவடுகள். 


Author: Satya
•8:07 PM
           அயல் நாட்டிலே - அட்லாண்டாவிலே ஆணி புடுங்க சென்ற நான் வெற்றியோடு வீடு திரும்பினேன்.[உன்ன தான் யாரும் தேடல லே அப்புறம் என்ன ஒரு இன்ட்ரோ] சரி விடுங்கப்பா ரொம்ப நாளா எங்கேடா ஆளே காணும்னு நீங்க நெனைபீங்கனு சொன்னேன்....
          ரெண்டு வாரமா வேலை பின்னி எடுத்துட்டாங்க! என்னோட அப்பா சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலை செய்தார். அதனால் வேலை விஷயமா அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் போவது வழக்கம். [உன் அப்பாவுமா? ன்னு கேட்காதீங்க உண்மையாவே அவர் ரொம்ப நல்லவர்!!] அவர் கூட நானும் பல முறை போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கிறேன். அங்கே புதுசா டூட்டிக்கு வர போலீஸ்காரர் அன்னிக்கு அரெஸ்ட் ஆகி பெஞ்ச்லே இருக்க கைதியே நாலு போட்டுட்டுதான் வேலை துடங்குவார்; வேலை முடிச்சி வீட்டுக்கு போற போலீஸ்ம் "இவன் பண்ணி இருப்பான் னு சொல்லி நாலு போட்டுட்டுதான் வீட்டுக்கு போவார். அத மாதிரி புதுசா போன என்ன அவனவன் வேலை விடுறானுக... அடேய் முடில டா...நீங்க எதிர் பார்க்கற அளவுக்கு நான் புத்திசாலி இல்லடானு சொல்ல [உண்மைய ஒத்துக்க] துடித்த என வாயே அடக்கி மனசுக்குள் இருங்கடா என் 12 ஸ்டாண்டர்ட் மார்க் சீட் காமிக்கறேன் சொல்லிகிட்டேன். ம்ம்ம். இந்த கணினி மென்பொறியாளர் [பேரு நல்லா தான் இருக்கு] வேலை செய்யறதுக்கு பதிலா, பொன்வண்டு அல்லது sunrise விளம்பரம் போட்ட கட் பனியன் போட்டு நாடார் கடைலே பொட்டலம் கட்ற வேலை எவ்வளவோ மேல்!! 8 - 10 மணிநேரம் வேலை செய்தாலும் நைட் நிம்மதியா தூங்கலாம். கொடுக்கற சம்பளத்துக்கு கரும்பு ஜூஸ் போடறமாதிரி பிழிஞ்சி எடுத்துட்டாங்க...சரி விடுங்க ...அட்லாண்டா எப்படி இருந்ததுனு பார்ப்போம்... 
          நான் வேலை விஷயமா பல நகரங்களுக்கு போய் வந்த அனுபவம் இருந்த போதிலும் அட்லாண்டா நியூ யார்க் நகரம் அளவிற்கு வெகுவாகவே கவர்ந்தது... காரணம் நான் டௌன்டவுன் என்று சொல்லப்படும் சாட்ச்சாத் சிட்டி லே தங்கி இருந்ததது. ஹில்டன் ஹோட்டல் 22 வது மாடியில் தங்கி இருந்தேன். நைட் view ரொம்ப பளிச்சென்று இருந்தது...சற்றே என நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன...[டொஇன்ன்ன்ன...background மியூசிக் பா ஹி ஹி ஹி ]சென்னைலே எங்கப்பா கூட பைக் லே மவுண்ட் ரோடு பக்கம் போனா LIC பில்டிங்க வச்ச கண்ணு வாங்காம பார்த்த காலம் உண்டு. அதே மாதிரி மீனம்பாக்கம் பக்கம் போனா ஏராகப்பல் [ aeroplane ந சின்ன வயசில நான் ஏராகப்பல் னு சொல்லுவேன் :D பெருமை..எல்லாம் தல எழுத்து] நிமிர்ந்து பார்க்காம வந்ததில்லை...இப்போ 22 வது மாடி, இந்த ரெண்டு வாரத்தில 3 முறை Virginia விற்கும் அட்லாண்டா விற்கும் பறந்தேன்.. அதெப்படி னு தெரிலே ஒரே முறை தான் மேலும் கீழும் பார்த்தாங்க ஆணி புடங்க அனுபிட்டங்க !! எப்படி தான் கண்டுபிடிகிறாங்கனு தெரிலே :(
          அட்லாண்டா வில் ஒரு நல்லா விஷயம் - Marta னு சொல்லப்படும் ரயில் வசதி இருப்பது ரொம்ப சௌகர்யமா இருந்தது. கார் கண்டிப்பாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. Aquarium,CNN, COCO COLA கம்பெனினு பலது இருந்தது.. ஆனா ஒன்னும் சுத்தி பார்க்க டைம் இல்ல படுத்தி எடுதுடானுங்க....இவ்வளவு பேசிட்டு அங்க பார்த்த பொண்ணுகள பத்தி சொல்லலைன்னா எப்படி? அதென்னமோ தெரில இந்த ஊரு பொண்ணுங்க மட்டும் த்ரிஷா படம் போட்டு வந்த புது fanta பாட்டில் மாதிரி shapeaa வளைவு நெளிவோட இருக்காங்க..ம்ம்ம் நம்ம பொண்ணுங்க 2 லிட்டர் பிஸ்லேரி பாட்டில் மாதிரி ஒரே shape ... இந்த ஊரு பசங்கலாம் ஆறடி இருக்கானுங்க அத்திக்கா மாதிரி இருந்திகிட்டு பேச்சை பாருன்னு சொல்ற பொண்ணுங்க பத்தி எனக்கு கவலை இல்லை ...[ஜான் பிள்ளையானாலும் நான் ஆண் பிள்ளை]
          ஒரு வழியா வேலை எல்லாம் முடிச்சி கிளம்பி வர ஏராகப்பல உட்கார்ந்தா அது ரன்வே லே வந்து திரும்ப கொண்டு போய் பார்க் பண்ணிட்டு ஒரு சின்ன பிரச்சனை சொல்லி, நம்ம ஊரு மப்சல் பஸ் மாதிரி காபி டி சாபிடரவன்கலாம் போய் சாப்டு வாங்க னு சொல்லி இறக்கி விட்டான்.. 4 மணிநேரம் லேட் பண்ணி கொடும.....ம்ம்ம் பக்கதுல ஒரு fanta பாட்டில் இருக்கவே அது கூட கொஞ்சம் கடலை போட்டு காலத்த ஓட்டி வீட்டுக்கு வரற்துகுள்ள போதும் போதும் னு ஆயிடுச்சு. இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவே நான் எழுதுவதற்கு காரணமான அலை கடலென திரண்டு வந்திருக்கும் என கோடான கோடி ரசிகர்களே , வாசகர்களே , பத்திரிக்கை நண்பர்களே உங்களுக்கு இந்த ப்ளாக்ஐ காணிக்கையாக்குகிறேன்.
த்து னு துப்புரவங்கள வன்மையா கண்டிச்சு கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.....Bye !!!