Author: Satya
•7:58 PM
வெகு நாட்களுக்குப்  பிறகு பல தமிழ் நெஞ்சங்களை ஒரு கூரைக்குள் பார்த்த திருப்தி 04/26/2014 (சனிக்கிழமை ) அன்று கிடைத்தது...அமெரிக்கா வந்த புதிதில் ஒரு இந்தியனை பார்த்தாலும் நம் உறவினரை பார்த்த மகிழ்ச்சி மனதில் தோன்றி மறையும்...நாளடைவில் பல இந்தியர்களை ஆங்காங்கே காண்பதினால் என்னவோ அவ்வுணர்வு சாதரணமாகி விட்டது.. ஆனால் தமிழர்களை காண நேர்கையில் இன்னமும் உடன்பிறந்தாரை கண்ட சந்தோஷம் தான் .... இந்தியன் என்ற உணர்வு இருப்பினும், தமிழன் என்ற உணர்வு சற்றே மேலோங்கி இருக்கத்தான் செய்கிறது...

நான் இருந்த இடம் , வள்ளுவன் தமிழ் மையம் மூன்றாம் ஆண்டு விழா  கொண்டாட்டம் அரங்கேறிய அனடெல் மேல் நிலை பள்ளி வளாகம். விழாவில் நான் எதிர்பார்த்ததை விட அதிக அளவில்
குழந்தைகளும் பெற்றோர்களும் கூடி இருந்தனர். நம் கலாச்சார உடை அணிந்து, ஆங்கங்கே தமிழ் ஒலிக்க, "ஆட்டோகிராப்"  படப்பாடல் ஒன்றில் தமிழ் எழுத்துக்கள் கதாநாயகியை சுற்றி சுற்றி வருவது போல் எனைச் சுற்றி வந்தன.... 

அறிவித்திருந்தபடி விழா சரியாக மூன்று மணியளவில் தமிழ்த் தாய் வாழ்த்து முழங்க துடங்கியது. பின்னர், வேல்முருகன் பெரியசாமி -வள்ளுவன் தமிழ் மையத்தின் தலைவர் வரவேற்புரை நல்க ஆடல், பாடல் என விழா கலைக்கட்ட ஆரம்பித்தது. குழந்தைகள் பாடிய அஞ்சலி அஞ்சலி - பாடல் உண்மையாகவே என்னை வியப்பில் ஆழ்த்தியது.. பலரால் அது karaoke என நம்ப முடியவில்லை. அவ்வளவு அருமையாக ஸ்ருதி தப்பாமல் பாடிய விதம் கண்டிப்பாக அனைவரின் உள்ளத்தையும்  கொள்ளைக் கொண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.  முன்னதாக விழாவை முன்னிட்டு பல நிலைகளில் உதவிக்கு தன்னார்வாளர்கள்  தேவை என்று  தமிழ் மையத்தின் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்தது;  நான் விழா  அரங்க பொறுப்பாளர் உதவிக்கு என் பெயரை பதிவு செய்திருந்தேன். (இந்த மாதிரி நல்ல விஷயம் கூட நீ பண்ணுவியா ???) என் வேலை, விழா அரங்கத்தில் திண்பண்டங்களை எடுத்து செல்வதை அனுமதிக்காமல் இருத்தல்,
குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான வசதிகளை அரங்கத்தினுள் செய்தல் என சின்ன சின்ன அலுவல்கள் மட்டுமே என்று நினைத்திருந்தேன்...உண்மையில் அதில் உள்ள கடினம் அங்கு தான் உணர்ந்தேன்..சின்ன குழந்தைகள் கையில் தின்பண்டங்களை வைத்துக் கொண்டு அரங்கத்தினுள் செல்ல முர்ப்படுகையில், தடுத்து நிறுத்தும் போது  பாவமாக பார்க்கும் அதன் கண்களை பார்ப்பது ரொம்ப கஷ்டம் ங்க .....பல குழந்தைகள் அந்த தின்பண்டங்களை"இந்தாங்க நீங்க வச்சிக்கோங்க" என்று என் கிட்ட கொடுக்கும்...அடப்பாவி சின்ன பசங்களோட பிஸ்கட் புடுங்கி தின்றான்னு அவங்க பெற்றோர் நினைக்கப் போறாங்கன்னு   மனசு பத பதைக்கும் .... இந்த குட்டீஸ் கூட்டத்துல ஒன்னு என் கிட்ட வந்து விவகாரமா பார்த்து "உள்ளே போய் சாப்பிட்டதானே தப்பு...நான் பாக்கெட் பிரிக்கவே இல்லயே.. " என்று கேட்டது. [எம காதகப் பைய...வெஷம்...வெஷம்...வெஷம்...அம்புட்டும் வெஷம்... என வடிவேல் பாணியில் தலையில் கொட்ட நினைத்தது என் மனம்...  ] நான் படும் பாட்டைப் பார்த்து என் மனைவி தூரத்தில் நின்று ரசி[சிரி] த்துக்கொண்டிருந்தாள்.. 

 தமிழ் - தமிழன் இரண்டுக்குமே ஒரு தனித்துவம் இருப்பதை மீண்டும் உறுதி செய்தது இந்த ஆண்டு விழா கொண்டாட்டம். நான் தமிழனாக இருப்பதால் இதனை சொல்லவில்லை... அன்னியனாய் இருந்திருந்தாலும் இதைத்தான்  சொல்லி இருப்பேன்... மொழி ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடு என்பதனை அங்கு நடைப் பெற்ற கலை நிகழ்ச்சிகளில் காண முடிந்தது....குழந்தைகள் ஒன்று கூடி ஆடிய  நடனங்கள், பாடல்கள், நாடகங்கள் மற்றும் மாறுவேட நிகழ்ச்சி அனைத்திலும் தமிழ், தமிழர் பண்பாடு, தமிழ் மூதாதையர்கள் என்று அனைத்திலும் தமிழ் பறைச்சாற்றியிறுந்தது;  விழா  முழுவதும் எம்மவரின் உணர்வும், நளினமும், எளிமையும்  இருந்தது... குறிப்பாக குழந்தைகளின் "காவடி சிந்து" கண்டோர் நெஞ்சை கவர்ந்தது.

சிறப்பு விருந்தினராய் வந்து சிறப்பித்த Dr. ராஜ் S. பாபு அவர்கள் குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கிப்
பாராட்டினார். மேலும், அவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் திடீர் என 2500 டாலர் காசோலையும் வழங்க, வேல்முருகன் அதை பெற்றுக்கொண்டார். குழந்தைகள் அரங்கேற்றியே வள்ளல் தேவை நாடகம் Dr. ராஜ் அவர்களை நினைவு கூர்ந்தது. இறுதியில் பாஸ்கர் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி நல்ல படி நிறைவு பெற்றது.  

பல்வேறு இனங்கள் ஒன்று கூடி வாழும் அயலகச் சுழலிலும் தமிழ் நிலைத்திருந்தது...
இருப்பினும், சில பெற்றோர்கள் இங்கும் அந்நிய மொழியை  ( ஆங்கிலத்தை ) தன்  குழந்தைகளிடம் பயன் படுத்தாமல் இல்லை என்பது ஒரு சிறு குறை... திருக்குறளை  ஆங்கிலத்தில் எழுதி "தங்க்லீஷ் -இல் " மேடையில் படித்த குழந்தைகளையும் காண முடிந்தது; தன் பிள்ளை தமிழில் பேசிக் கொண்டிருக்கும் போது "Now she is speaking tamil; Earlier it was so tough for her..Thanks to you and VTA" என்று சொன்ன பெற்றோரின் தலையில் நங்கென்று ஒரு கொட்டு கொட்ட கை துடித்தது... முதலில்  இவங்களை  நிலை 1 லே சேர்ந்து தமிழ்  கற்றுக் கொடுக்கனும் என என்று மனதில் நினைக்காமல் இல்லை...  வந்திருந்த கூட்டத்திலே வெகு சிலரே இவ்வண்ணம் இருப்பதை பார்த்தேன்.. அந்த விகிதம் மிக  மிகக் குறைவு தான்; இருப்பினும் நான் தோள் தட்டிக்கொள்ளவில்லை, என்னைச் சமாதனப் படுத்திக்கொள்ளவில்லை.. அமெரிக்காவில் ஆங்கிலம் கற்றுக் கொள்வது ஒன்னும் கடினமன்று...பள்ளியில், ஏனைய குழந்தைகளிடம் விளையாடும் பொழுது என்று பல சூழலில் ஆங்கிலம் மட்டுமே பேச நேரிடுகிறது..அதனால் வீட்டில் தமிழில் மட்டுமே பேசினால் குழந்தைகளிடத்து தமிழ் மென்மேலும் வளரும் என்பதில் ஐயம் இல்லை...
|
This entry was posted on 7:58 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: