Author: Sathish
•4:42 PM
கொஞ்ச நாட்களாகவே கம்பரையும், வள்ளுவரையும் யாரோ என் மேல் ஏவி விட்டது போல் ஒரே தமிழ் பற்று பீறிட்டிருந்த சமயம்.... ஞாயிறு மதியம் என் மனைவி சமையலறையில் பரபரப்பா எதையோ செய்து கொண்டிருக்கும் நேரம்...ரைஸ் குக்கர் தன்னுள் அடக்கி வைத்திருந்த கோபத்தை வெறித்தனமாக கூச்சலிட்டு அழைக்க " அந்த குக்கரை கொஞ்சம் அடக்கி விடுங்களேன்;" என்று குரல் கொடுத்தாள் என் மனைவி பாத்திரம் துலக்கிக் கொண்டு.... கூப்பிட்ட வேகத்தில் போகவில்லை என்றால், கூச்சலிடுவது குக்கர் மட்டுமிருக்காது என்பதை நன்கு உண்டர்ந்த நான் சமையலறை நோக்கி விரைந்தேன்... அடுப்பு அருகே சென்ற நான் அமைதிகாத்தேன் ஒரு நிமிடம்..."பிரியா குக்கருக்கு தமிழ் லே என்ன?" என்று கேட்ட அடுத்த கணம், ரட்சகன் படத்தில் நாகார்ஜுன் கையில் ஏறும் நரம்பு போல் என் மனைவி கையில் முறுக்கேறுவதைப் பார்த்து, உடனே அடக்கினேன்...குக்கரை....

"ஏம்பா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுது? யாரு உங்கள இப்படி கேட்க வைக்கறாங்க?" என்றாள் சிரித்துக்கொண்டே...விளையாட்டாய்  அந்த உரையாடல் முடிந்தாலும், அன்று முழுவதும் குக்கருக்கு தமிழ் லே என்ன தான் மொழி பெயர்ப்பு என்ற எண்ணம்  என்னுள் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கும் தெரியவில்லை என் மனைவிக்கும் தெரியவில்லை...

யோசித்துப் பார்க்கையில்  பல விஷயங்கள்,.ரொம்பவும் நடைமுறையில், புழக்கத்தில் இருக்கும் / இருந்த  வார்த்தைகளாகட்டும்,அல்லது பழக்க வழக்கங்களாகட்டும்,   பல தகவல்கள் நம்மை விட்டு விலகிக்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன். அதுவும் என்னைப்  போல அயல் நாட்டில் வந்து வாழ்போர் இடுத்து கேட்கவே வேண்டாம்...

மொழி என்பது நாம் வாழும் இடம், சமூகம் மற்றும் தொழில் இதைப் பொறுத்து வேறு படுகிறது. பல இனத்தார் தனக்கெனத் தனி  பேச்சு வழக்குகள் கொண்டிருந்தனர்.. அதனையே நாம் வட்டார வழுக்கு என்கின்றோம்... சமீபத்தில் பார்த்த "கடல்" படத்தில் கையாண்ட வார்த்தைகளை நான் அவசியம் இங்கு பதிவு செய்யவேண்டும் ..."என்ன மக்(க)ளே" என்பது நாகர்க்கோவில் மற்றும் அதனை ஒட்டிய ஊர்களில் சகஜமாக பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று.... "கடல்" பார்த்த எத்தனை பேருக்கு அவை புரிந்திருக்கும் / தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...எங்க ஊர் பக்கம் போகும்போது நான் தமிழ் தான் பேசுகிறேன் என்று நம்ப பலர் தயாராக  இல்லை ... சென்னையில் பிறந்து வளர்ந்ததால் 'சென்னை தமிழ்' எம்மவர்களின் வாயில் சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது... யோசித்துப் பார்க்கையில் வட்டார வழக்கு என்பதை விட்டு எவ்வளவு தூரம் வந்து விட்டோம் என்று மனதில் தோன்ற, அதை தேட ஆரம்பித்தது என் மனம்...

முதல் கட்டத் தேடலில் தமிழின் வட்டார மொழி வழக்குகள் பெரும்பாலும் ஒலிகளில் மட்டுமே மாறுவதை காண முடிந்தது...உதாரணமாக "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், திருநெல்வேலி  பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு" என்றும், யாழ்ப்பாணம் பகுதிகளில் "இங்கை" என்றும், மட்டக்களப்பில் சில பகுதிகளில் "இஞ்ஞ" என்றும் வழங்கப்படுகின்றது....மட்டக்களப்பு "இஞ்ஞ" வை ஒரு பக்க மூக்கை மூடி சொல்லிப் பாருங்கள் "மலையாளம்" வந்துவிடும்...[ அடடே என்ன ஒரு ஆராய்ச்சி!!!]

வட்டார வழக்கு பலசமயம் கொச்சைப்பேச்சு என்று எண்ணப்படுகிறது. இதுபிழை. ஒரு தனிமனிதன் மொழியை சிதைத்துப்பேசினால் அது கொச்சை, ஒரு பகுதியின் மக்கள் முழுக்க அவ்வாறு பேசுவார்களென்றால் அது வட்டார வழக்கு.. (பல பேர் சேர்ந்து செய்தால் தப்பு, தப்பாகாது என்ற அறிய தத்துவம் போல் ....)

என் கல்லூரி நண்பன் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவன்...அவன் பேசுவதை சத்தியமாக யாராலும்  வட்டார வழக்கு என்று வகுக்க முடியாது...வேண்டுமென்றால் நான் அதனை "லூஸ்மோகன் வழக்கு" என்று சொல்வேன்... அப்புறம் என்பதை "அப்பாலிக்கா"  என்பான்... பெரும்பாலான சொற்களை குக்கரில் போட்டு 4 -5 விசில் விட்டது  போல் குழைத்து பேசுவான்... [மீண்டும் குக்கரா? அதுக்கு தமிழ் லே என்ன? யாரவது சொல்லுங்களேன்...ஹி ஹி ஹி ... 'சமைக்கலம்' என்றார் என் 'இன்டர்நெட் புலி' நண்பர்  ஒருவர்...] மொடாக் குடிகாரர்களுக்கு என்று தனியாக பாஷை இருப்பதாகவும், அவை பெரும்பாலும் 'ழ'கரத்தில் இருக்குமென்றும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா கூறியது நினைவுக்கு வருகிறது.... 

வட்டார வழக்கில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஒரு பகுதியின் இயல்பான உறுப்பினரால் இயல்பாக கருதப்படும் அதே விஷயம் அல்லது சொற்கள் பிறரால் விபரீதமாக உணரப்படும். உதாரணமாக,  மயிர் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.. மயிர் என்றால் செம்மொழியில் முடி. தெரியாத்தனமா கூட குமரி மாவட்டம் (பெரும்பாலும் என்ன மாவட்டங்களிலும்) போய் மயிர் என்று சொல்லிடாதீங்க...மயிர் மற்றவர்களை திட்ட மட்டுமே பயன் படுத்துற சொல்லாகிவிட்டது....


வட்டார வழக்குகளை நூல் பிடித்தவாறே சில தூரம் செல்லலாம் என்று போனால் தலை சுத்துதுடா சாமி...அப்படியா என்றா கேட்கறீங்க? சரி... என் கை பிடிச்சு வாங்க...கொஞ்ச தூரம் போய்  பார்ப்போம்... தூயதமிழில், முடி என்றால் மகுடம். மகுடம் என்றால் நெல்லைவழக்கில் குடம் போலிருக்கும் ஒருவகை மேளம். இதே மேளத்தை குமரி மக்கள் களேபரம் என்பார்கள்... சம்ஸ்கிருதம் பேசுபோறிடத்து மேளம் என்றால் கூந்தல் என்று அர்த்தம்... கூந்தல் என்றால் குமரி வட்டாரவழக்கில் ஆடிமாத மழைமூட்டம். ஆனால் நெல்லையில் அதற்குப் பனைநுங்கு என்று பெயர்…நுங்குதல் என்றால் குமரியில் அடிபின்னுதல். பின்னுவது என்றால் மையத்தமிழ்நாட்டில் முடைதல். முடை என்றால் பணம் இல்லை என்கிறது  மதுரை வழக்கு... இப்போ சொல்லுங்க தலை சுத்துதா இல்லையா?

நாகர்கோவில் பக்கம் 'சுண்டு' என்றால் உதடு, சக்கை என்றால் பலாப்பழம்...சென்னை வாசியான எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசா தோணுது...சிலசமயம் நாகை மக்கள் 'முடிஞ்சு', 'வரட்டு', 'இருக்கட்டு '  என்றெல்லாம் பேசும்போது 'ஐயா! கடைசியில் இன்னும் ஒரு எழுத்து இருக்கே' என்று சொல்ல தோன்றும் ....

நெல்லை மாவட்டதிலிருந்து நெறைய பசங்க என் கூட படிச்சாங்க...அவங்க வட்டார பாஷை எனக்கு ரொம்பவே பிடிக்கும்... சென்னை லே 'என்னடா' என்னப்பா' என்பது அங்கே 'என்னல', 'என்ன மக்கா'  என்றாகிறது...அது போக வார்த்தைகளின் கடைசியில் 'டே' சேர்ப்பதும் அங்கு சகஜம் ...உதாரணமாக 'வருதுடே' 'போகுதுடே' என்று சொல்லும் போது எக்ஸ்ட்ரா 'டே' ஒருவித உரிமையை, நட்பை குறிக்கிறது...[அடடே!!!] 'நீ கூட ஒத்தையிலே நிக்கறடே....' என்ற வைரமுத்துவின் கடல் பாடல் வரிகள் ஒரு எடுத்துக்காட்டு...

 வட்டார வழக்குத் தேடுதல் வேட்டையில், பல இடுகைகளில், வலையுலகில் பல தகவல்களை காண முடிந்தது... தமிழகத்தின் தெற்கு பகுதிகளில் வாழும் மக்கள் தான் பேசும் மொழியே தமிழ் என்றும், மற்றன தமிழே அல்ல  என்று கருதுகின்றனர் ...  எம்பளது  என்று கூறிப் பழகியே தஞ்சாவூர் மக்கள் "எண்பது" என்று சொல்பவர்களை நகைப்பர்கள். அவ்வாறே, திருநெல்வேலியை திண்ணவேலி என்று சொல்லும் அன்னியர் மொழிவளமில்லாதவர்கள் என்பது நெல்லையின் நம்பிக்கை. ஊர் சார்ந்து மட்டுமல்லாது, வட்டார வழக்கு சாதி சார்ந்தும், மதம் சார்ந்தும் மாறுபடுகிறது. உடம்பெங்கும் இதயத்துடிப்பு முக்கியமானாதாக இருப்பினும், மணிக்கட்டில் மிளிரும் நாடித்துடிப்பு போல வட்டாரவழக்கு என்பது  தனித்து, சிறப்பாக வெளிப்பாடு கொள்கிறது. அதில் நுண்ணிய பொருள்வேறுபாடுகளைப் பார்ப்பவர்கள் வட்டாரவழக்கு என்பதின் பெருமையை உதாசினப்படுத்த மாட்டார்கள்...

ஆராய்ந்து பார்த்தால் வட்டார வழக்கின் ஆழத்தை வரையறை செய்வதில் ஆய்வாளர் நடுவே கடுமையான விவாதமாக உருவெடுத்து வருகிறது... மனைவியர் கணவனை அழைக்கும் வட்டார வழக்குச் சொற்களை சேகரித்த ஞா.ஸ்டீபன் அவர்கள் இஞ்சேருங்க, ஏங்க, ஏனுங்க, யானுங்க, பாருங்க, இவியளே, கேட்டேளா போன்ற நானூறுக்கும் மேற்பட்ட சொற்களைப் பட்டியல் போட்டிருக்கிறார். 

 பிழைப்புக்காக அயல்நாட்டில் பணிபுரியும் நாம், வட்டார வழக்கை விடுத்து வெகுதூரம் செல்கிறோம். வட்டார வழக்கு தமிழின் சிறப்பம்சம். நம் மண்ணின் மணம்  வீச வட்டார வழக்கு பெரும் பங்கு வகிக்கிறது என்பதனை கண்டிப்பாக மறந்துவிடக்கூடாது...நம் குழந்தைகள் நம் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது... தாய் மொழியல்லாது பிற மொழிகளை ஆர்வமாக கற்ப்போம்; தவறில்லை..ஆனால் தனித்துவம் வாய்ந்த நம் வட்டார வழக்கினை தவறாது உபயோகிப்போம்... இல்லையேல் வருங்காலம் நம் மொழியின் அடையாளத்தை 'இறந்தகாலம்' ஆக்கிவிடும்....என்று எழுதி பதிவை முடிக்கும் பொது, எங்கிருந்தோ 'இஞ்சேருங்க' என்று ஒரு குரல்...கையில் காப்பியுடன் பிரியா...' என்ன சொன்ன? என்ன சொன்ன?' என்று கேட்டேன்....அடடா இது என்ன வம்பா போச்சு...'என்னங்க' என்று சொன்னேன் என்றாள்  என் மனைவி, இல்லத்தரசி, அகமுடையாள், வூட்டுக்காரி , இல்லக்கிழத்தி, சம்சாரம், பெஞ்சாதி, ஆத்துக்காரி என் செல்ல ராஜாத்தி !!!
Author: Sathish
•6:40 PM
அம்மாடி...ஒரு வழியா நம்ம ஊர்லே தேர்தல் முடிஞ்சுதுடா சாமி....ஆளாளுக்கு பண்ண ரவுசு இருக்கே ...அட்ரா...அட்ரா... நம்மை ஆளப் போற தலைவர பார்த்தா நமக்கு ஒரு முன்னுதாரமா இருக்கணும்...அப்படி ஒருத்தர கூட பார்க்க முடியவில்லையேன்னு யோசிக்கும் போது  அழுகாச்சி அழுகாச்சியா வருது....நான் இங்கே [அமெரிக்காவில் ] இது வரை ரெண்டு தேர்தலே பார்த்திருக்கேன்...1 Governer தேர்தல் 2 . President மற்றும் Senetar தேர்தல். இங்கேயும் தான் ஊர் ஊரா போய்  பிரச்சாரம் பண்ணாக... இவர் தான் வேட்பாளர், அவர் யாரு, என்ன பண்ணாரு என்ன பண்ண போறாரு என்பதை எல்லாம் ஊடகங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் பார்க்க  முடிஞ்சது.... அத பாத்துப்புட்டு,  நம்ம ஊரு தேர்தல்களில் நடந்த அளப்பரையே பார்க்கும் போது, இவங்கள பார்த்து நாம கத்துக்க வேண்டியது நெறைய இருக்குன்னு தோணுது...அதெல்லாம் கத்துக்கிட்டா ரொம்ப டீஜிண்டா (I mean decent ஆ ) ஆயிடுவோமே...அது எதுக்கு? 

அது சரி, தேர்தல் முடிஞ்சி ஒரு மாசமாகுது இப்போ என்னடா அத பத்தி எழுதற? பொலம்பறன்னு நினைக்காதீங்க... தேர்தல் முடிஞ்சாலும், தேர்தலுக்கான சுவடுகள மறைவதற்குள் அடுத்த தேர்தலே வந்துடும்... நான் ஆங்காகே ஒட்டி வச்சிருக்க விளம்பர பானர்களையும், போஸ்டர்களையும் தான் சொல்றேன்...அது என்ன தெரிலே, நம்ம ஆளுங்களுக்கு விளம்பரங்களில் உள்ள மோகத்தைப் பார்த்தா எனக்கு வயித்தெரிச்சலா  இருக்கு... நம்ம ஊர்லே டிஜிட்டல் போஸ்டர் என்ன அவ்வளவு சீப்பா? அநியாயத்துக்கு காமெடி பண்றாங்க... இடப்புறம் இருக்க படத்த பார்த்ததும்  என்னோட வயித்தெரிச்சலோட வலி உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நெனைக்கிறேன்...ஏன் இந்த கொலை வெறின்னு தான் எனக்கு தெரில்லே... இவங்கெல்லாம் எவ்வளவு பெரிய தலைவர்கள்...அவங்கள இப்படி இந்த கோணத்துல பார்க்கனுமா? அதிலும் கடைசியா இருக்க வ.வூ.சி யே பாருங்க [விஜயகாந்த் வாயில தயிர் வடை வச்சுக்க சொல்லி எடுத்திருப்பான்களோ?] இந்த போஸ்டர் மூலமா என்னதான் சொல்லவறாங்க? விஜயகாந்த் சார் க்கு இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்  பட்டது தெரியுமா? தெரிஞ்சா அவருக்கே  சிரிப்பு வருமே...

சரி போகட்டும், புது தலைவரு, புது தொண்டர்கள்.. ஆர்வக்கோளாறு ஏதோ பண்றாங்கன்னு பார்த்தா, பழம் தின்னு கொட்டை  போட்ட முன்னணித் தலைவர்களும் இப்படி காமெடி பண்றத தான் என்னால ஜீரணிக்க முடிலே... எப்படி தான் யோசிப்பாங்களோ? இந்த போஸ்டரப் பார்த்தா, எனக்கு 'நாடோடிகள்'  படத்துல வர அந்த காமெடி தலைவர் ஞாபகம் தான் வருது... கோ - கோ ன்னு அடுக்கு மொழிலே போடணும் என்பதற்காகவே போட்ட விளம்பரம் இதுன்னு நெனைக்கிறேன்...இதுல வேற பின்னாடி ADMK போஸ்டர்..ஒரு செகண்ட் நான், இந்த தேர்தல்லே இவங்க ரெண்டு பேரும் கூட்டணியோ ன்னு பதறிப் போயிட்டேன்.... பாருங்க ஸ்டாலின் தல மேல இரட்டை இல்லை சின்னம், கலைஞர் தலைக்கு  மேல MGR போட்டோ..

சரி, இதெல்லாம் தேர்தல் நேரத்துலே ஒரு மெசேஜ் வச்சி, ஏதோ கடைசி பென்ச் லே உட்க்கார்ந்து இருக்க தொண்டன் பண்ணிட்டான் விடுங்க..சில போஸ்டர்களா பார்த்தா என்னடா சொல்லவறீங்கன்னு தோனும்.  இது என்ன அரசியல் வருகைக்கான போஸ்டரா? இளைய தலவலி சீ தளபதி, தமிழகம் ஆயிட்டாரே... கட்சி ஆரம்பிச்சாச்சு, கொடி போட்டாச்சு ஏன் கண்டப் போராட்டம் கூட நடத்தியாச்சு...ஆனா பிரச்சாரம், பொதுக்கூட்டம் ன்னு மேடை ஏற மாட்டோம்...கோர்வையா என்னாலா பேசக் கூட முடியாது..ஆனா நான் ரௌடி ஆயிட்டேன் , ரௌடி ஆயிட்டேன் வடிவேலு சொல்ற மாதிரி நான் அரசியல்வாதி ஆயிட்டேன்ன்னு சொல்லிக்கவேண்டியது...அவர் பாஷையிலேயே  சொல்லனும்னா..."அண்ணா...என்னகன்னா இதெல்லாம்...நான் தெரியாம தான் கேட்கறேன் இதெல்லாம் தேவையா?"

இது யாருன்னு சத்யமா எனக்கு தெரில்லங்க.. பொங்கலுக்கு பெரிய கிரீடிங் கார்டு போட்டிருக்கார்னு நெனைக்கிறேன்... ஸ்வப்ப்பா....முடிலே... எதுக்காக இந்த விளம்பரம்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? ஏன் இப்படி ஊற நாசம் பண்றாங்க? பல கேள்விகள் நம்மிடையில், ஆனால் பதில் இல்லை....


விடு கழுதை, இந்த அரசியல் பிரமுகர்கள் தான் இப்படி பண்றாங்க பார்த்தா, இந்த போஸ்டர பார்க்கும் போது யாரை குறை சொல்றதுன்னு எனக்கு புரிலே... அந்த வரிகளை கூர்ந்து கவனிங்க மகா ஜனங்களே..."திரிஷாவின் சிரிப்பு , திகட்டாத இனிப்பாம்!!!!1958 S.S.L.C மாணவர்கள் ன்னு 8 பேரோட போட்டோ வேற...இதில்லென்ன பெருமை வேண்டி கெடக்கு? தள்ளாத வயசுல இப்படி தறிகெட்டு திரியனுமா?

பிரபலமானவர்களின் அலும்பல்களுக்கு இணையாகத்தான் சாதாரண மக்களும் செயல் படுகிறார்கள். உன் வீட்டு நிகழ்ச்சிக்கு, வாழ்த்து தெரிவிக்க ஊரெல்லாம் எதுக்கு போஸ்டர் அடிக்கற? கல்யாணம் பண்றத அவ்வளவுப் பெரிய சாதனையாக கருதுகிறார்கள்...புதுமணத்   தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்க, மாமா, அத்தை சித்தி சித்தாப்பா ஒன்னு விட்ட பெரியப்பா அவன் இவன்னு ஒரு பெரிய லிஸ்ட் போட்டு, முடிஞ்சா அவங்களோட போட்டோ வேற போட்டு, ரெண்டு ஆர்டின் உள்ளே கல்யாணப் பொண்ணு மாப்பிள்ளையோட பழைய போட்டோ போட்டு வாழத்துக்கள தெரிவிப்பாங்க... மண்டபத்தோட வாசல் லே வரவேற்க்க ஏதோ ஆசைக்கு ஒன்னு வைக்கராங்கன்னா  கூட பரவாயில்ல... அவங்க வீட்டு கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்ல ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சி ஓட்டறது எதுக்குங்க? இந்த போஸ்டர் பத்தி பேசும்போது, எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருது...நான் பச்சைப்பன் கலைக் கல்லூரிலே படிக்கும் போதே என்னோட சீனியர் ஒருத்தன் படிக்கிற காலத்திலேயே கல்யாணம் பண்ணிகிட்டான்.. தலைவரு கல்யாணத்துக்கு அடிச்ச போஸ்டர்கள் போக, கொஞ்சம் புதுமையா இருக்கட்டும்ன்னு "கொடைக்கானலுக்கு தேனிலவு போய் வெற்றியுடன் திரும்பும் திருவை வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்' ன்னு அவன் சொந்தகாற பசங்க பேரெல்லாம் போட்டு அவன் தெரு புல்லா போஸ்டர் அடிச்சி ஒட்டி இருந்தான்... என்னோட வாய் தான் சும்மா இருக்காதே, 'என்ன சீனியர் கொடைக்கானலுக்கு ஹனிமூன் போனியே, பாக்க வேண்டியதெல்லாம் பார்த்தாச்சா? ன்னு கேட்டேன்...துரத்தி துரத்தி அடிக்க வந்துட்டான்..[சத்தியமா நான் கொடைக்கனால மனசுல வச்சி தான் கேட்டேன் ...ஹி ஹி ஹி ]... எதுக்கு ஓரார் வாய்க்கு அவல் போடற மாதிரி செய்திகள  போஸ்டர் லே  போடறது? பயபுள்ள அதுக்கப்புறம் போஸ்டர் போடறதில்ல லே ...

கல்யாணத்துக்கு மட்டுமில்ல...செத்தாலும் இதே மாதிரி தான்...செத்து போனவன் கண்ணுல இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் போட்டு இரங்கல் தெரிவிகிறார்கள்...மின்னேலாம் இந்த மாதிரி போஸ்டர்லே ரெண்டு பெரிய கண்கள் போட்டு அதுலே இருந்து கண்ணீர் வரும்...இப்போ இறந்தவர்கள் கண்ணுலே இருந்தே கண்ணீர் வர மாதிரி எதுக்கு போடறாங்க? ஐயோ ஐயோ.. சிறு பிள்ளைத் தனமா லே இருக்கு... நாம சுத்தம்மா இல்லாம சும்மா சினிமாகாரர்களையும் , அரசியல்வாதிகளையும் பழிக்கக் கூடாது...நெனச்சதுக்கெல்லாம் நாமும் போஸ்டரப் போட்டு ஊர அசிங்கப்படுதிட்டு அடுத்தவர்கள்   மேல சொல்லக் கூடாது.....இப்படி அடிக்கற டிஜிட்டல் போஸ்டர் லே நான் வன்மையா கண்டிக்கறது ஒன்னு தான்....'எங்கள் வீட்டு மகாலட்சுமி மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி" ன்னு சின்ன பொண்ணு போட்டோவ போட்டு ...ச்சே கொடுமைங்க இது...பாவம் அந்த புள்ள ஒழுங்கா ஸ்கூல்க்கு போயிட்டு வந்திருக்கும்....அத புடிச்சி  ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சி ...காளிபசங்க கிண்டல் பண்றதுக்கா? முட்டாள்தனமான போஸ்டர்லே முதல் இடமே இந்தமாதிரி சமாசாரத்துக்கு போஸ்டர் அடிக்கறது தான். நாம வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையா? கொஞ்சம் யோசிச்சி பாருங்க மக்களே!!!!
Author: Sathish
•7:52 PM
நம்ம ஊருக்கு வந்தாலே போதும்! நேரம் போறதே தெரியாது...இப்போ தான் வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ளே நாள் ஓடுது... அமெரிக்காவில என்ன தான் ஆடம்பர வாழ்கையும், பிரம்மாண்டமான வசதி வாய்ப்புகள் இருந்தாலும் நம்ம ஊரோட, நம்ம மக்களோட இருக்குற ஒரு மனநிம்மதி அங்க இல்ல என்பத அமெரிக்க வாழ் இந்தியர்கள் கண்டிப்பாக மறுக்க முடியாத உண்மை.

ஆனாலும் சில நேரத்துல, நம்ம மக்கள் நடந்துக்கிற சில விஷயங்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு. படிச்சவன், படிக்காதவன் எல்லோருமே சில விஷயங்களில் ஒரே மாதிரி இருப்பது மனசு ஏத்துக்க மாட்டேங்குது..ஏண்டா, US போய்வந்தா இப்படி தான் பேசுவியானு சொல்ற நண்பர்களே, இந்த பதிவு மூலமா நான் பேசறது நான் ரொம்ப நாளா  வெறித்தனமா யோசிக்கிற, நடைமுறை படுத்தனும்னு நெனைக்கிற ஒரு விஷயம்.

நம்மில் பலருக்கு "சுயஒழுக்கம்" சற்று மங்கி போய்டுச்சோனு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..சுயஒழுக்கம் என்றால் தம் அடிகறதும், தண்ணி அடிக்கறதையும் தவறு என சொல்லி 'குடி' மக்களிடம் அடி,உதை வாங்க நான் தயாரா இல்ல...அடுத்தவனுக்கு தொல்ல இல்லாம நீ என்ன வேணும்னா பண்ணுங்கறது தான் என்னோட கூற்று...தம் அடிச்சு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம புகைய குறிபார்த்து பக்கத்துல நிக்கறவன் மூஞ்சில உடறத பார்த்தா அந்த சிகெரேட்டே அவன் வாயில இருந்து புடுங்கி, திருப்பி நெருப்பு இருக்க பக்கத்த அவன் வாயில் திரும்ப வைக்க வேண்டும் என்று வெறித்தனமா யோசிக்குது மனசு...அதே மாதிரி பொது எடத்துல தண்ணியடிச்சிட்டு விழுந்து கெடகிறவன் பார்த்தாலும், சமயத்துல கோவம் அதிகமா வருது...அது அவர்களோட அறியாமைங்கறதா, இல்ல திமிருன்னு சொல்றதானே தெரில. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுயஒழுக்கத்தை அரசாங்கம் கற்றுக் கொடுக்கணும் நெனைக்காம நாம் ஏன் சில நெறிமுறைகளை பின்பற்றி அதனை வரையறுத்து ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாதுங்கறது தான் என்னோட கேள்வி. நான் தம் அடிகல, தண்ணி அடிக்கலனு மார் தட்ரவங்க  எல்லாம் ஒழுங்கா நடந்துக்கராங்கனு அர்த்தம் பண்ணிக்க கூடாது...இது தப்புன்னு தெரியாமலேயே நெறைய தப்பு நடக்குது..உதாரணதிற்கு, நான் என்னோட  தாய்மண்ணே வணக்கம்...( பாகம் 1 ) பதிவுல சொல்லி இருப்பேன்...விமான நிலையத்துல ஒவ்வொரு காருக்கு பின்னாடியும், பெட்டிய தூக்கி வர உதவுற கார்ட் நிக்குது...அங்க வர முக்கால்வாசி பேரு படிச்சவனாவோ அல்லது உலக அனுபவம் உள்ளவனாவோ தான் இருப்பான். ஆனால் அவங்களுக்கும் இது ஒரு தவறான விஷயமாவே தெரிலே... அத கொண்டுபோய் உறிய எடத்துல வைக்கணும்னு ஏன் தோனமாட்டேங்குது? சும்மா அரசாங்கத்தையும் மற்ற இலாக்காகளையும் குறை சொல்வதை விட்டுவிட்டு ஏன் நாம ஒழுங்கா நடந்துக்க கூடாது? சின்ன விஷயங்கள ஆரம்பிக்கலாமே, நாளடைவில அதுவே பல விஷயங்கள திருத்துற ஒரு முதற்படியாக இருக்குமே... ஒன்னுமில்லேங்க சென்னை லே இருந்த நேரத்துலே நான் கவனித்த ஒரு விஷயம், டிராபிக் சிக்னலே நம்ம ஆளுங்க தமாஷா எடுக்கறாங்க....ஒரு நாள் நான் சிக்னலே நிக்கறேன்...எனை கடந்து எத்தன வண்டி போகுது...அதிலும் சில பேரு ஒரு லுக் வேற விடறானுங்க...அடேய் ரெட் சிக்னல் டா...நில்லுங்கப்பா....ஒரு PTC பஸ் பின்னாடி வந்து ஹோர்ன் அடிசசு கெட்ட வார்த்தைலே திட்டறான்..எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வந்துடுச்சு...உண்மைய சொல்லப்போனா என்ன மாதிரி யோசிக்கிறவங்க நெறைய பேர் இருக்கோம்...ஆனா அதற்கான முயற்சிய எங்கே, எப்படி ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சியே நாளா கடத்துறோம்....இன்னும் சில பேர் சொல்ற காரணத்துக்கு எனக்கு, என்ன பதில் சொல்றதுன்னு புரியல...என்னோடநெருங்கிய நண்பன் "பிரதீப்"...ஹைதராபாத்லே இருக்கான்...ரொம்ப நல்ல பையன்..நல்ல திறமைசாலி...[அப்புறம் உனக்கு எப்படி நண்பன்..ஹி ஹி ஹி ] "மச்சி இது பொது பிரச்சனைடா நீ ஒழுங்கா இரு...உன்ன பார்த்து மற்றொருவன் ட்ராபிக் ரூல்ஸ் மதிப்பான் சொன்னா..." போட லூசுப்பயலே ! நான் மட்டும் நின்னா அடிச்சி தூக்கிடுவான்..அப்புறம் எப்படி இன்னொருவன் என்ன பார்த்து நிப்பான்னு" கேக்கற கேள்விக்கு சத்தியமா எனக்கு பதில் தெரிலே...சின்ன சின்ன விஷயத்துல ஆரம்பிக்கிற தப்பு தான் நாளைக்கு பழக்கமாகவே மாறுது. சின்ன சின்ன நல்ல விஷயங்கள கடைபிடிப்போமே....அதை பழகிப்போமே!!! நான் என் நண்பர்களோட நீண்ட நாட்களாக ஒரு பொதுவான விஷயத்தை பேசிக்கொண்டிருகிறேன்...ஒரு நல்ல ஒழுக்கமான சமுதாயம் உருவாக முதலில் தனிமனித ஒழுக்கம் - "சுயஒழுக்கம்" ரொம்ப அவசியம் என்பது என்னோட கருத்து...சுயஒழுக்க கோட்பாடுகள் சிலவற்றை வரையறுத்து, அதை கடைபிடிக்கும் ஒரு குழு ஒன்று ஆரம்பிக்க வேண்டும். அதுல இன்னிக்கு அஞ்சு பேரு, ஆனால் அந்த ஆஞ்சு பேரும் 100% அந்த கோட்பாடுகளை மதிப்பவராக இருக்க வேண்டும்...அவர்கள் இந்த குழுவின் நோக்கங்களை மற்றவர்களுக்கு எடுத்துசொல்லி ஐந்தை, ஐநூறாக, ஐந்தாயிரமாக உயர்த்த முயற்சிக்க வேண்டுமென்பது என்னோட குறிக்கோள்...நான் இதை பற்றி யார்கிட்டே பேசினாலும்...எல்லோரிடமும் ரொம்ப ஆர்வம் இருப்பது சந்தோஷமா இருக்கு...அவங்களுக்குள்ள இருக்க ஆசையும், ஆக்கமும் நல்ல சமுதாயம் வராதா என்ற ஏக்கமும் என்னால் உணர முடிகிறது...சும்மா orkut , Facebook னு வச்சிக்கிட்டு  போட்டோ பிடிச்சிபோடவும் கடலை போடவும் நேரத்தை வீணாக்குவதிற்கு பதில் அதே மாதிரி ஒரு community நல்ல பொது விஷயத்திற்கு பயன்படுத்த ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்பது என்னோட ஆசை..பார்போம் எவ்வளவு சீக்கிரம் அதை நடைமுறை படுத்துகிறேன் என்று ...

மற்றபடி...வழக்கமான செண்டிமெண்ட் காட்சியுடன் என் வீட்டாரிடமும், நண்பர்களிடமும் இருந்து விடை பெற்று..US திரும்பினேன்...ம்ம்ம் இனி அதே மேனேஜர், அதே ப்ராஜெக்ட், வால்மார்ட், இந்தியன் grocessory ன்னு நாள கடத்தனும்..US திரும்பும்போதும் அதே விமானம்தான், அதே வசதிதான் ஆனால் கண்களில் சந்தோஷம் இல்லை கண்ணீர் தான்!!!





Author: Sathish
•7:38 AM
என்னுடன் பழகியவர்களுக்கு தெரியும் நான் ரொம்ப ஜாலியான, கலகலப்பான பேர்வழியென்று..எதையுமே சீரியசா எடுத்துக்கொள்ளாத நான் இந்த ப்ளாக்லே சில கஷ்டமான நிகழ்வுகளையும் பரிமாறிக் கொள்வதற்கு வருந்துகிறேன். 

2009 ஆரம்பிக்கும் போதே எனக்கு தீராத, என்றுமே மீள முடியா துயரத்துடன் ஆரம்பித்த வருடம்!!! எனதுயிர் நண்பன் ஷ்யாம் கேன்சர் ல் பெரும் அவஸ்தைப்பட்டு ஜனவரி மாதம் இவ்வுலகை விட்டு பிரிந்தான். ஷ்யாம்....எனக்கு கிடைத்த ஒரு வித்யாசமான நண்பன். ஒரு சின்ன கெட்ட பழக்கமும் இல்லாமல், தவறியும் யாரையும் புண்படுத்தாமல், சிரிக்க சிரிக்க பேசி எங்களை மகிழ்வித்தவன். எல்லோருக்கும் ரொம்பவும் பிடித்த ஒரு கேரக்டர். அவனுடன் பழகிய நாட்களை என்றுமே என்னால் மறக்க முடியாது.மரணம் 29 வயதில் அவனை அணைத்துக்கொண்டது! நீ எங்களை விட்டு பிரிந்தாலும் உன் நினைவுகள் என்றும் எங்களை விட்டு பிரியாது நண்பனே..

முதல் வலியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அடி..அப்பட்டமான அடி... என் அப்பா பிப்ரவரி மாதம் என்னை விட்டுப்  பிரிந்தார். தாங்கமுடியவில்லை என்னால். வீட்டிற்கு மூத்த பையன் என்பதை முதல் முதல் உணர்ந்த நாள் பிப்ரவரி 3. என் அப்பாவை விட மிகச் சிறந்த ஒரு மனிதரை நான் கண்டதில்லை... தன் வாழ்நாளின் கடைசி வரை ஒரு சாதாரன அரசு அதிகாரியாக வேலை பார்த்து ஒய்வு பெற்ற ஒரு மாதத்தில் இப்படி ஒரு கோரச்சம்பவம்... மூன்று பேரை பெற்றெடுத்து அவர்களை ஒரு நல்ல நிலைக்கு ஆளாக்கி, திருமணம் செய்வித்து தன் வேலைகள் அனைத்தையும் முற்றிலும் முடித்துவிட்டு கண் மூடிவிட்டார் என் தந்தை..நான் எவ்வளவு தப்பு செய்தாலும், கோபப்பட்டாலும் ஒருவரிடமும் என்னை விட்டுக் கொடுக்காமல் பார்த்து பார்த்து என்னை வளர்த்தவர் என் அப்பா... எங்களுக்காகவே வாழ்ந்தவர்..இன்று எங்களுடன் இல்லை.... 

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்..இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..." என்ற வரிகளின் அர்த்தம் என் மனதில் ஆழப் பதியவைத்தவர் என் அப்பா..

நம்மில் பலர் நாம் வந்த நோக்கத்தை இன்னும் அறியாமல், அதற்கான முயற்சியும் எடுக்காமல் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறோம்.  "வாழும் மனிதருக்குள் எத்தனை சலனம்....வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவர்களின் கவனம்..." கவனிக்ககூடிய கண்ணதாசனின் வரிகள்....

வாழ்கை...ஜனனதிர்க்கும் மரணத்திற்கும் இடையே கட்டப்பட்ட மிகச்சிறிய பாலம். அதில் எனைப்போன்ற கம்ப்யூட்டர் அலுவலர்கள்,
 "கூடு விட்டு ஆவி போயின் கூட வருவதென்பது ஒன்றும் இல்லை என்று நன்கு தெரிந்த போதும், வருங்காலத்தை எண்ணி..நிகழ் காலத்தை, இறந்த காலங்களாக்கிக் கொண்டிருக்கிறோம்". 

போகிற போக்கில் வாழ்வது வாழ்கையல்ல...போகிற பாதை உணர்ந்து போவது தான் வாழ்கை. வாழ்கையை வாழ கற்றுக் கொள்வோம்.  அதற்காக சன்யாசியை இருக்கச் சொல்லவில்லை...சராசரி மனிதனாய் இருந்தால் போதும். எடுத்த பிறப்பிற்கு பயனாய் நம்மை சார்ந்த சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த ஒன்று நம் பெயர் நிலைக்குமாறு செய்தால் போதும்... மண்ணில் பிறந்த அனைவரும் மகாத்மா ஆகவேண்டாம், மனிதனாய் வாழ்ந்தால் போதும்...

நான் 2009  திரும்பிப் பார்த்தபோது சில வாழ்கை உண்மைகளை உணர்ந்தேன்...சில இலக்குகளை மனதில் கொண்டு பயணிக்கப் போகிறேன்...2010 ல் நான் கடைப்பிடிக்க நினைக்கவிருக்கும் ஒன்று தொடர்ந்து எழுதுவது நிறைய படிப்பது... பிறக்கவிருக்கும் புது வருடம் புதுப் பொலிவை கொடுக்கட்டும் அனைவருக்கும்... புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.     



Author: Sathish
•11:02 AM
 சமீபத்தில் நான் ஒரு ஆங்கில குறும்படம் / விளம்பரப்படம் பார்த்தேன்.[வித் subtitle? ன்னு கிண்டல் பண்றவங்க பத்தி எனக்கு கவலை இல்லை...ஹி ஹி ஹி ]அதுல, ஒரு 18 - 22 வயது பெண்ணொருத்தி [சும்மா கும்முன்னு இருப்பாங்கோ!!...தப்பா நினைக்காதீங்க நான் கலைய அர்ச்சனை பண்றவன்! ஆராதிக்கிறவன் !!] தன் காதலன் வீட்டின் வெளியே நின்றுகொண்டு அவனை அழைப்பாள்...பையன் என் இனத்தான்; காது கொஞ்சம் மந்தம் [காது மட்டுமா!] அவளுக்கு செவி சாய்க்கமாட்டான். அம்மணி கத்தி, ஓய்ந்து என்னசெய்வது என்று யோசித்து கீழே கிடக்கும் காகிதங்களை உருள் செய்தும், சிறு சிறு கற்கள் கொண்டு கூரை மீதும் அவன் நிழல் தெரியும் ஜன்னல் மீதும் வீசி எறிவாள்...நோ யூஸ்! இவள் செய்கையை தூரத்தில் இருந்து பார்க்கும் வழிபோக்கர் ஒருவர் உதவும் பொருட்டு [worst fellows பொண்ணுக்கு உதவி ன்ன அவனவன் கெளம்பிடராங்க !!!] அவள் அருகில் சென்று " கொஞ்ச நேரமா நான் உன்னை பார்த்திட்டிருகேன்; நீயும் விடாம முயற்சி பண்ற அவனும் நீ வீசியெறிய கற்களுக்கு கவனிக்கிற மாதிரி தெரில,  இதுல ட்ரை பண்ணுன்னு சொல்லி தன் செல்போனை கொடுப்பார்! அந்த பெண் தன் நன்றியை கண்களில் மட்டும் அல்லாமல் புன்னகையிலும் தெரிவித்து, அடுத்த கணம் அந்த செல்போனை ஜன்னலில் விட்டெறிய ஜன்னலும், செல்போனும் உடைய திகைத்து நிற்பான் அந்த வழிப்போக்கன் [காதலனும் தான்!!!]

அந்த பொண்ணு மாதிரியே நம்மில் பலபேர் ஊர்லே திரியறோம்! நான் அவர்களை இரும்ப திருடி பேரிச்சம் பழம் வாங்குற பசங்கன்னு சொல்லுவேன்! திருடறது ன்னு முடிவு பண்ணிட்ட நேரா பேரிச்சம் பழமே திருடேன்! [அடடா பின்றடா ! அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டா செதுக்கி பகத்துலேயே உட்கார வேண்டிய பய நீ!!!]

உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் புத்தி உள்ளது! [உனகிருக்கா? ன்னு கேட்பவர்களை நான் வன்மையா கண்டிக்கிறேன் :( ] புத்தி என்பது ஏட்டு சுரக்காய்; ஆனால் சமயோசிதம் உள்ளவன் வாழ்க்கையில் பல்வேறு கால கட்டத்தில் கவனிகபடுகிறான்! வெற்றியும் பெறுகிறான்! நம்மில் பலர் தான் செய்யும் வேளையில் கெட்டிகார தனம் இருந்தும், தொழில் நுட்பத்தில் கலை தேர்ந்தும் மேலதிகாரிகளின் அல்லது அலுவலகத்தின் நன்மதிப்பை பேர இயலாமைக்கு சமயோசிதம் சற்றே சரிந்து நிற்பது தான் காரணமென்பேன்! இன்னும் சிலர் சமயோசிதம் - சந்தர்பவாதம் இவைகளுக்கு வித்யாசம் தெரியாமல் இருகிறார்கள். தான் செய்த வேலையை தகுந்த இடத்தில உபயோகித்து நன்மதிப்பை பெறுபவன் சமயோசிதவாதி ; மற்றவன் செய்த வேலையை தான் செய்ததாக கூறுபவன் சந்தர்ப்பவாதி..

சந்தர்பவாதிகளிடத்து தன் திறமை சிதையாமல் இருக்க சமயோசிதமாய் இருப்போம் நாம்!