Author: Satya
•10:28 PM
நான் ஒன்பதாவது படிக்கும் பொழுது, தமிழ்லே பத்து மதிப்பெண் பகுதி ஒன்று...கதை, கவிதை அல்லது கட்டுரை...அரையாண்டு வரை கட்டுரை எழுதி வந்தேன்...2 - 2 1 /2 பக்கத்துக்கு மிகாமல் எழுதினாலும் 6 அல்லது 7 மதிப்பெண் தான் வரும்...அப்போதுதான் என் நண்பன் கமலேஷ் [பேர பார்த்து சேட்டுப் பய, decent னு நெனைக்காதீங்க....வீனா வருத்தப்படுவீங்க...] "கட்டுரை எழுதினா வேலைக்காகாது டா; கவிதை எழுதினா நல்ல மதிப்பெண் வரும்..பத்து வரி எழுதினா போதும்" அது இதுனு சொல்லி...என்ன ஏத்தி விட்டான்...அப்போ எடுத்தது தான் இந்த கவி அவதாரம்...[அட்ரா அட்ரா...]அரையாண்டு முடிஞ்சு, அடுத்த வகுப்புத் தேர்வு வந்தது...ஆசிரியரை பற்றி கவிதை ....வெறும் 15  நிமிஷத்துல எழுதினது...

அறிவுக்கண்ணை திறந்த என் ஆசிரியரே...
உம்மைப போற்றிப் பாடவந்தேன் கவிஞ்யனாக!!

அன்பால் திருத்த வேண்டும் என்று என்னை நினைத்தீர்;
நான் அடங்காமல் போகவே பிரம்பை எடுத்தீர்!!

கரும்பலகை தனில் எழுதி எனக்குப் புரியவைத்தீர்;
பல புரியாத புதிர்களையும் விளங்கவைத்தீர்!!!

அழியாச் செல்வமாம் கல்விச் செல்வம் ;
அதனை அறிய வைத்த ஆசிரியரே எந்தன் தெய்வம்!!!

இத்துணையும் செய்த உம்மைப் போற்றிப் பாட..
தமிழ் வார்த்தைகளை தேடினேன் நாட்களாக!!!!

எழுதி முடிச்சதும் என்னோட முதல் கவிதைய பார்த்து ரொம்ப சந்தோஷமா இருந்தது... பெருமையாவும் இருந்தது...கண்டிப்பா என் தமிழ் ஆசிரியரோட பாராட்டு கெடைக்கும்னு தோனுச்சு...marksheet கொடுக்கும் பொழுது என்னை கூப்பிட்டு படிக்கச் சொல்லி பாராட்டினார்...கிளாஸ் லே எல்லோரும் கை தட்டினாங்க....அடுத்து நம்ம சகா கமலேஷ்  ...அவனுக்கும் கைத்தட்டல் கெடுக்கப் போகுதுன்னு நெனசிட்டிருக்கும் போதே என் சார் கண்ணுல கொலை வெறி...பசு மாட்டைப் பற்றி கட்டுரை எழுத சொன்னா, பொங்கல் பற்றி 2 பக்கத்துக்கு எழுதி..கடைசி அரைப் பக்கத்துக்கு மாட்டுப் பொங்கல்...மாடுன்னு சொல்லாம பசு மாடு, பசு மாடுன்னு அங்கங்கே சொல்லி, பசுமாட குளிப்பாட்டுவாங்க, பசு மாட்டுக் கொம்புல வர்ணம் அடிப்பாங்கன்னு எழுதி இருக்கான்...கமலேஷின் அடி உதையில் ஆரம்பித்தது என் கவிப் ப்ரேவேசம் ...நெறைய சின்ன சின்ன குறும் கவிதைகள்... நிலவிற்கு மட்டும் வாயிருந்தால், ஒப்பாரி வைத்து அழுதிருக்கும்...யார் கவிதை எழுதினாலும் அத நோண்டாம விடமாட்டாங்க...நானும் ஒன்னு ட்ரை பண்ணேன்...12th ரிசல்ட் வந்த கையோட...இப்போவே உங்களுக்கு கவிதைக்கரு புரிஞ்சிருக்கும்....அதே அதே....

விண்வெளியில் வெள்ளித் தட்டாய் 
மிளிரும் வெண்ணிலாவே !!!
உனக்கு மட்டும் தேய் பிறை இருப்பினும் 
வளர் பிறையும் கூடவேயுண்டு!!!!

எந்தன் வாழ்வில் வெறும் தேய்ப் பிறை
 மட்டும் தானோ?

பின்பு ஏன் எனதாசைகள் ஒவ்வொன்றும் 
நிராசையாகி, கடைசியில்.....

அமாவாசை ஆகின்றன???

என்னுடைய "ஆண்பாவம்" பதிவை படித்தவர்களுக்கு தெரியும் நான் பன்னிரண்டாவது படிக்கும் போது அடிச்ச கூத்து...படிக்கற காலத்துல படிக்காம விட்டுபுட்டு நெலாவ புடிச்சி கவிதை வேறு....[விடுங்கப்பா பொது வாழ்க்கைலே இதெல்லாம் சாதாரனம்மப்ப...]

அடுத்து விடலைப் பருவ வயதில் எழுதிய கிறுக்கலில் ஒரு சாம்பிள்...

என்னவளே!!
நீ தானே உன் தாயிடம் கல்லூரிக்கு
கிளம்புவதாய் சொன்னாய்! 
பின்பு எனக்கேன் அவசரம் என் கால்களை
BATA வினுள் நுழைப்பதற்கு!!

என்னவளே !!
நீ நாணத்தால் தலை குனிந்து சொல்வதேனவோ 
உண்மை தான்!
உன் சுடிதாரில் உள்ள கண்ணாடி சில்லைகளின் ஒலி
தலை கவிழ்ந்து செல்லும் என்னை நிமிரச் செய்கிறதே!!!

என்னவளே!!
என்னிடம் மட்டும் A K 47 இருந்தால் 
உனைப் படைத்த பிரம்மனுக்குத் தான் முதல் குறி!
நீ அன்று சிந்திய புன்சிரிப்பால் தானே நான் இன்றும் 
என்னை கண்ணாடிக்கு அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன்!!!

என்னவளே!!
விளங்காத விடை உந்தன் விழிகள் 
என்பதால்தானோ 
வினாவற்ற விடுகதையாகிப் போனது 
எந்தன் வாழ்கை!!!

இது போல அப்பபோ சில பல கிறுக்கல்களை எழுதிய அனுபவம்....நாட்கள் ஆக ஆக நான் எழுதுவது குறைய ஆரம்பித்துவிட்டது....[ஐ ஜாலி சொல்றவங்க பேச்சு டு கா ] இந்த பதிவு கண்டிப்பாக என்னை உந்தித் தள்ளும் என நினைக்கிறேன்...எழுதுவதில் உள்ள ஆர்வம், சற்றே இனிமையானது...எண்ணங்களை இளமையாக வைக்க உதவுகிறது...

இந்த பதிவின் மூலம் மீண்டும் உணர்கிறேன் ...நானும் ஒரு கவி...முழுவதுமாக இல்லாவிட்டாலும்....

This entry was posted on 10:28 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: