Author: Satya
•7:38 AM
என்னுடன் பழகியவர்களுக்கு தெரியும் நான் ரொம்ப ஜாலியான, கலகலப்பான பேர்வழியென்று..எதையுமே சீரியசா எடுத்துக்கொள்ளாத நான் இந்த ப்ளாக்லே சில கஷ்டமான நிகழ்வுகளையும் பரிமாறிக் கொள்வதற்கு வருந்துகிறேன். 

2009 ஆரம்பிக்கும் போதே எனக்கு தீராத, என்றுமே மீள முடியா துயரத்துடன் ஆரம்பித்த வருடம்!!! எனதுயிர் நண்பன் ஷ்யாம் கேன்சர் ல் பெரும் அவஸ்தைப்பட்டு ஜனவரி மாதம் இவ்வுலகை விட்டு பிரிந்தான். ஷ்யாம்....எனக்கு கிடைத்த ஒரு வித்யாசமான நண்பன். ஒரு சின்ன கெட்ட பழக்கமும் இல்லாமல், தவறியும் யாரையும் புண்படுத்தாமல், சிரிக்க சிரிக்க பேசி எங்களை மகிழ்வித்தவன். எல்லோருக்கும் ரொம்பவும் பிடித்த ஒரு கேரக்டர். அவனுடன் பழகிய நாட்களை என்றுமே என்னால் மறக்க முடியாது.மரணம் 29 வயதில் அவனை அணைத்துக்கொண்டது! நீ எங்களை விட்டு பிரிந்தாலும் உன் நினைவுகள் என்றும் எங்களை விட்டு பிரியாது நண்பனே..

முதல் வலியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அடி..அப்பட்டமான அடி... என் அப்பா பிப்ரவரி மாதம் என்னை விட்டுப்  பிரிந்தார். தாங்கமுடியவில்லை என்னால். வீட்டிற்கு மூத்த பையன் என்பதை முதல் முதல் உணர்ந்த நாள் பிப்ரவரி 3. என் அப்பாவை விட மிகச் சிறந்த ஒரு மனிதரை நான் கண்டதில்லை... தன் வாழ்நாளின் கடைசி வரை ஒரு சாதாரன அரசு அதிகாரியாக வேலை பார்த்து ஒய்வு பெற்ற ஒரு மாதத்தில் இப்படி ஒரு கோரச்சம்பவம்... மூன்று பேரை பெற்றெடுத்து அவர்களை ஒரு நல்ல நிலைக்கு ஆளாக்கி, திருமணம் செய்வித்து தன் வேலைகள் அனைத்தையும் முற்றிலும் முடித்துவிட்டு கண் மூடிவிட்டார் என் தந்தை..நான் எவ்வளவு தப்பு செய்தாலும், கோபப்பட்டாலும் ஒருவரிடமும் என்னை விட்டுக் கொடுக்காமல் பார்த்து பார்த்து என்னை வளர்த்தவர் என் அப்பா... எங்களுக்காகவே வாழ்ந்தவர்..இன்று எங்களுடன் இல்லை.... 

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்..இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..." என்ற வரிகளின் அர்த்தம் என் மனதில் ஆழப் பதியவைத்தவர் என் அப்பா..

நம்மில் பலர் நாம் வந்த நோக்கத்தை இன்னும் அறியாமல், அதற்கான முயற்சியும் எடுக்காமல் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறோம்.  "வாழும் மனிதருக்குள் எத்தனை சலனம்....வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவர்களின் கவனம்..." கவனிக்ககூடிய கண்ணதாசனின் வரிகள்....

வாழ்கை...ஜனனதிர்க்கும் மரணத்திற்கும் இடையே கட்டப்பட்ட மிகச்சிறிய பாலம். அதில் எனைப்போன்ற கம்ப்யூட்டர் அலுவலர்கள்,
 "கூடு விட்டு ஆவி போயின் கூட வருவதென்பது ஒன்றும் இல்லை என்று நன்கு தெரிந்த போதும், வருங்காலத்தை எண்ணி..நிகழ் காலத்தை, இறந்த காலங்களாக்கிக் கொண்டிருக்கிறோம்". 

போகிற போக்கில் வாழ்வது வாழ்கையல்ல...போகிற பாதை உணர்ந்து போவது தான் வாழ்கை. வாழ்கையை வாழ கற்றுக் கொள்வோம்.  அதற்காக சன்யாசியை இருக்கச் சொல்லவில்லை...சராசரி மனிதனாய் இருந்தால் போதும். எடுத்த பிறப்பிற்கு பயனாய் நம்மை சார்ந்த சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த ஒன்று நம் பெயர் நிலைக்குமாறு செய்தால் போதும்... மண்ணில் பிறந்த அனைவரும் மகாத்மா ஆகவேண்டாம், மனிதனாய் வாழ்ந்தால் போதும்...

நான் 2009  திரும்பிப் பார்த்தபோது சில வாழ்கை உண்மைகளை உணர்ந்தேன்...சில இலக்குகளை மனதில் கொண்டு பயணிக்கப் போகிறேன்...2010 ல் நான் கடைப்பிடிக்க நினைக்கவிருக்கும் ஒன்று தொடர்ந்து எழுதுவது நிறைய படிப்பது... பிறக்கவிருக்கும் புது வருடம் புதுப் பொலிவை கொடுக்கட்டும் அனைவருக்கும்... புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.